Editor's Choice

கருவுற்றிருக்கும் பெண்கள் கர்ப்பகாலத்தில் வணங்க வேண்டிய தெய்வங்கள் என்று முன்னோர்கள் சொல்லி வைத்திருக்கின்றனர். சில புராண நூல்களிலும் இதற்கான குறிப்புகள் காணப்படுகிறது.  

ஒரு பெண் தான் கர்ப்பம் அடைந்தது முதல் பிரசவகாலம் வரை மாதந்தோறும் ஒவ்வொரு குறிப்பிட்ட மாதத்திற்கு உரிய கிரகங்களையும் அதற்குரிய அதிதெய்வங்களை வழிபட்டு வந்தால் பிரசவம் நல்லபடியாக நடக்கும். 

கருவுற்ற பெண்ணின் இந்த வேண்டுதலால் பிறக்கும் குழந்தை அறிவும், ஆயுளும், நல்லொழுக்கமும் கொண்ட வாரிசாக உருவாகும். ஒரு பெண்ணிற்கு அது தலைப்பிரசவமாக இருந்தாலும் சரி, இல்லாவிட்டாலும் சரி, இந்த தெய்வங்களை கூறும் முறைப்படி வணங்கினால் நன்மையே நடக்கும்.  

தலைப்பிரசவமாக இருந்தால் எட்டாம் மாதத்தில் சுக்கிரனையும், சுக்கிரனின் அதிதேவதையான ஸ்ரீலக்ஷ்மியையும் வணங்க வேண்டும்.  இரண்டாம் குழந்தை கருவுற்றிருக்கும் போது சுகப் பிரசவத்திற்கு சுக்கிரன் மற்றும் கர்ப்பிணிப் பெண்ணுக்கு உரிய ஜன்ம லக்னாதிபதியை வழிபடவேண்டும்.

கருவுற்ற மூன்றாம் மாதத்தில் பிரம்மா, காயத்ரி, விஸ்வகர்மா மற்றும் தக்ஷ்ணாமூர்த்தியை வணங்கவேண்டும்.  கர்ப்பிணிகள் கருவுற்ற ஆறாம் மாதத்தில் சிவனை வழிபடவேண்டும்.

கர்ப்பிணி அல்லது அவரது கணவரின் ஜென்ம நட்சத்திரத்திம் உள்ள நாளில் ஆதரவற்ற குழந்தைகள் மற்றும் முதியோர்களுக்கு அன்னதானம் செய்ய வேண்டும். 

வளைகாப்பு, சீமந்தம் செய்யும்ப்போதோ அல்லது கருவுற்ற ஏழாவது மாதத்தில், வறுமையில் வாடும் தாய்மார்களின் ஏழை பச்சிளம் குழந்தைக்கும் மற்றும் ஏழை மக்களுக்கு திருமண உதவிகள் செய்வது கடவுள்களின் மனதைக் குளிரச் செய்யும்.  

குலதெய்வ வழிபாடு எப்போதுமே அவசியம் என்றாலும், குறிப்பாக கர்ப்பகாலத்தில் மிகவும் முக்கியமானதாகும், குல தெய்வம், தங்கள் குலக் கொழுந்தை நல்ல முறையில் பிரசவிக்க அருள் புரிவார்.

முதல் மாதம் சுக்கிரன், இரண்டாம் மாதம் செவ்வாய், மூன்றாம் மாதம் குரு, நான்காம் மாதம் சூரியன், ஐந்தாம் மாதம் சந்திரன், ஆறாம் மாதம் சனி, ஏழாம் மாதம் புதன், எட்டாம் மாதம் சுக்கிரன், ஒன்பதாம் மாதம் சந்திரன், பத்தாம் மாதம் சூரியன் என கர்ப்பிணிப் பெண்கள் நவ கிரகங்களையும் அதன் அதிதெய்வங்களையும் வழிபட்டால் கருவில் உள்ள குழந்தை ஆரோக்கியமாக இருக்கும். சுகப்பிரசவமும் நடைபெறும்.

Editor's Choice

மத்திய பிரதேசத்தில் ஓடுகின்ற நதிகளில் மிகச் சிறந்ததாகக் கருதப்படுவது ‘பெட்வா’ என்று சொல்லக் கூடிய நதியும் ஒன்று. இதில் ஓடுகின்ற நதிநீர் வானத்தைப்போல நீலநிறமாக இருக்கும். இந்த நீல வண்ண நதிக்கரையிலே, நதியின் மெல்லிய தென்றல் காற்றினிலே, அமைதியான சூழ்நிலையில் அமைந்திருப்பது ‘ஓர்ச்சா’ என்ற நகரமாகும். இந்த நகரத்திலே பளிங்குக் கற்களாலான பலவிதமான அரண்மனைகள் கண்களைக் கவரும்படியாக அமைந்திருக்கின்றன.

இதில் நம் கண்களைப் பறிக்கும் அரண்மனை ‘ராஜ் மஹால்’ என்ற அரண்மனையாகும். இந்த அரண்மனைக்குள்ளே ராமாயண, மகாபாரதக் காட்சிகளை விவரிக்கும் வண்ண வண்ண ஓவியங்கள் அற்புதமாக சித்தரிக்கப்பட்டுள்ளன. இதில் இந்த நாட்டு ராணிக்குத் தனியாகக் கட்டப்பட்ட அரண்மனை ‘ராய் பிரவின் மஹால்’ என்று அழைக்கப்படுகிறது. இந்த அரண்மனைக்குள்ளே ஓர் அழகிய ராமர் கோயிலும் இருக்கிறது. ‘ராஜா ராமன்’ என்று அழைக்கப்படும் இக்கோயிலுக்குள் உண்மையில் ராமர் இல்லை. ஆனால், மகாராணியின் ‘ராய் பிரவின் மஹால்’ என்றழைக்கப்படும் அந்த அரண்மனையில் தான். ‘சதுர்புஜ ராமராக’ சிறிய வடிவில் அமைந்துள்ளார்.

இந்த ராமரை ‘ராமராஜா’ ஆலயத்திற்கு தரிசிக்க வரும் பக்தர்கள், அந்த ஆலயத்தில் வெற்றிடமாக உள்ள இடத்திலே ராமர் இருப்பதாக மனதில் தியானத்து வணங்கிவிட்டு, மகாராணியின் அரண்மனையில் இருக்கும் ஸ்ரீ ராமரையே தரிசித்து அருள் பெறுகின்றனர்.  ராமபிரானுக்கு நடைபெறும் அத்தனை பூஜைகள், ஆராதனைகள், திருவிழாக்கள் அனைத்தும் இந்த மகாராணி அரண்மனையிலே நடைபெறுகிறது.

இந்த ஆலயத்தில் நான்கு திசைகளிலும் நான்கு ஆஞ்சநேயர்கள் இருக்கின்றனர். ராம பிரானுக்கு ஆரத்தி முடிந்ததும் அந்த ஆரத்தியை’ ஆஞ்சநேயருக்கு முன்னால் வைத்து வழிபடுகின்றனர். அந்த ஆரத்தி ஜோதியை ஆஞ்சநேயர் அயோத்திக்கு எடுத்துச் செல்வதாக சாஸ்திரங்கள் கூறுகின்றன.

இரண்டாவது அயோத்தி என்றழைக்கப்படும் இந்த ‘ஓர்ச்சா’ ராமர் கோயிலிருக்கும் இந்த ராமரை அந்த நாட்டு மன்னராக மக்கள் வழிபடுகிறார்கள். ஒவ்வொருநாளும் காலையில் காவல் துறையினர் இந்த ஆலயத்திற்கு வந்து ஸ்ரீராமருக்கு மரியாதை செலுத்திய பின்புதான் பக்தர்கள் ஸ்ரீராமரை தரிசிக்க வேண்டுமென்பது விதிமுறையாக இங்கு உள்ளது. இரவு வேளையில் ஸ்ரீராமர் அயோத்தியில் உறங்கிவிட்டு, அதிகாலையில் இந்த அரண்மனைக்கு வந்துவிடுவார் என்பது ஐதீகம்.

மகர சங்கராந்தி, ஸ்ரீராமநவமி வசந்த பஞ்சமி ஆகிய நாட்களில் விசேஷமாக பூஜைகள் நடைபெறும். அப்போது பக்தர்கள் வருவார்கள். இந்த ‘‘ராஜாராம் மந்திர்’’ மத்திய பிரதேசத்திலுள்ள ஜான்சியிலிருந்து 15 கி.மீ. தொலைவில்  அமைந்துள்ளது.

Editor's Choice

பணக்காரர் ஆக வேண்டும் என்ற ஆசை யாருக்கு தான் இருக்காது.  செல்வம் பெருக, மகா லட்சுமியின் மனம் குளிர என்ன செய்ய வேண்டும். செல்வத்தின் தெய்வமான லட்சுமி தேவி பூஜை செய்தால் மகிழ்ச்சி அடைகிறார். எனவே தாமதம் என்ன, இதைனை பின்பற்றி வாழ்க்கையில் மகிழ்ச்சியாக இருக்கவும்

(1) வெள்ளிக்கிழமை அன்னை லட்சுமிக்கு உகந்த நாளாகக் கருதப்படுகிறது. இந்த நாளில் லட்சுமி தேவியை முறையாக வணங்கத் தொடங்குங்கள். தேவிக்கு இளஞ்சிவப்பு பூக்களை கொண்டு பூஜியுங்கள். ரோஜா பூக்கள் அன்னை லட்சுமி தேவிக்கு மிகவும் பிரியமானவை.

(2) அன்னையை வழிபட, ஸ்ரீலட்சுமி சகஸ்ரநாமம் அல்லது ஸ்ரீலலதா சகஸ்ரநாமம் ஜபிக்கலாம் அல்லது ஸ்ரீசுக்தம் பாராயணம் செய்யலாம். தாமரைக்காசுகளை வைத்து பூஜிக்கலாம்.  (108 காசுகள்).

(3) வீட்டில் தூய்மையாக வைத்திருக்க வேண்டும். மணம் நிறைந்த சூழல் இருக்க வேண்டும்.

(4) சூரிய உதயம் மற்றும் சூரிய அஸ்தமனத்தின் போது ஒருபோதும் தூங்க வேண்டாம்.

(5) முடிந்தவரை தானம் செய்யவும். பசு அல்லது நாய்க்கு உணவளியுங்கள். யாசகம் கேட்டு வருபவருக்கு உணவு கொடுங்கள்.

(6) வடகிழக்கில் அழுக்கை சேர விடாதீர்கள்.

(7) வீடு, கடை- தொழிற்சாலையில் வடக்கு, கிழக்கு மற்றும் ஈசான மூலையை மூட வேண்டாம். அங்கே மணம் நிறைந்த பூக்களை வைக்கலாம்.

(8) துடைப்பத்தை யார் கண்களும் படாத ஒரு இடத்தில் வைத்திருங்கள்.

(9) சுத்தமான ஆடைகளை அணியுங்கள். வாசனை திரவியத்தைப் பயன்படுத்துங்கள்.

(10) வீடு முழுவதையும் தூய்மையாக வைத்திருங்கள். தினமும்  ஒரே நேரத்தில் கடவுளை வணங்குங்கள்.

Editor's Choice

கணவர் சத்தியவானின் ஆயுசு முடிந்து, எமனுடன் போராடிய சாவித்திரியின் கதை தெரியும். யமனுடன் போராடி, கணவரின் உயிரை மீட்டெடுத்தாள். மேலும் சாவித்திரியின் மாமியார், மாமனாருக்குக் கண் பார்வை திரும்பக் கிடைத்தது.. யம தர்மனுக்கு ஆத்மார்த்தமாக நன்றி தெரிவித்தாள் சாவித்திரி. அன்றைய விரதத்துடன், பூஜையுடன் நைவேத்தியம் செய்ய நினைத்தாள்.

வீட்டில் இருந்த கார் அரிசியையும், காராமணியையும் கொண்டு இனிப்பு அடையும் உப்பு அடையும் செய்தாள். கடைந்த வெண்ணெய் உருகாமல் இருந்தது. நுனி வாழை இலையில் அவற்றை வைத்து, ’ஓரடைய நோன்பும், உருக்காத வெண்ணெயும் படைக்கிறேன். ஒருக்காலும் என் கணவன் என்னைப் பிரியாமல் இருக்க வேண்டும்’ என்று கண்ணீர் மல்க வேண்டினாள். நைவேத்யம் செய்தாள். பிரசாதத்தை அனைவருக்கும் வழங்கினாள்.

சாவித்திரியின் இந்த நோன்பை பெண்கள் பலரும் இன்றைக்கும் கடைபிடித்துவருகின்றனர். அதுவே காரடையான் நோன்பு என்று கொண்டாடப்படுகிறது.

வருகிற 14ம் தேதி ஞாயிற்றுக்கிழமை காரடையான் நோன்பு. மாசி மாதத்தின் கடைசி நாளும் பங்குனி மாதத்தின் ஆரம்ப நாளும் இணைகிற நேரமே காரடையான் நோன்பு கொண்டாடப்படுகிறது.

நோன்பு நாளில், காலையில் தலைக்குக் குளித்து பூஜையறையில் அமர்ந்து, தெரிந்த ஸ்லோகங்களைச் சொல்வோம். மெல்லிய நோன்புக் கயிற்றில் ஒரு சில பூக்களைக்கட்டித் தயார் செய்துகொள்வோம். இல்லத்தில் உள்ள சிறுமியர் முதல் வயதான முதிர்ந்த பெண்கள் வரை அனைவருக்கும் ஒன்று என்றும் இல்லத்தில் உள்ள அம்பாள் மற்றும் தாயார் படங்களுக்கு ஒவ்வொன்று என்றுமாக எடுத்துக்கொள்வோம்.
வீட்டு வாசலிலும் பூஜையறையிலும் கோலமிடுவோம். விளக்கேற்றுவோம். அதன் மீது நுனி வாழை இலையை வைத்து, இரண்டு அடையும், உருக்காத வெண்ணையும் வைக்க வேண்டும். இலையில், வெற்றிலை, பாக்கு, இரண்டு வாழைப்பழங்களும் வைக்க வேண்டும். அதன் மீது நோன்புக் கயிற்றையும், புது தாலிச் சரடையும் வைக்க வேண்டும். அவற்றுக்கு எதிரே அமர்ந்து, இலையைச் சுற்றி நீர் தெளித்து நைவேத்தியம் செய்து பிரார்த்தனை செய்வோம். பிறகு தாலிச்சரடையும் நோன்புச் சரடையும் கழுத்தில் கட்டிக்கொள்ளுங்கள்.

மாங்கல்ய பாக்கியம் நிலைக்கும். மாங்கல்ய பலம் பெறும். 

Editor's Choice

அவிநாசி அவிநாசிலிங்கேஸ்வரர் கோயிலில் சூரிய ஒளிக்கற்றை பாய்ந்து மூலவர் அவிநாசிலிங்கேஸ்வரர் 'பொன்' போல் ஜொலித்தார்.

கொங்கு மாவட்டத்தில் உள்ள ஏழு சிவாலயங்களில் முதன்மையானது திருப்பூர் மாவட்டம் அவிநாசியில் உள்ள அவிநாசிலிங்கேஸ்வரர் கோவில். கோவிலில் ஆண்டுதோறும் மாசி மாத இறுதி மற்றும் பங்குனி முதல் வாரத்தில் லிங்கத்திருமேனி மீது சூரிய ஒளி விழும் அதிசயம் நிகழ்வது வழக்கம்.

கடந்த இரண்டு நாட்களாக சூரியன் உதயமானதும் படிப்படியாக ஒளிக்கற்றை கோவிலுக்குள் ஊடுருவி மூலவர் மீது விழுந்தது. நேற்று காலை 6:45 மணிக்கு ஒளிக்கற்றை பாய்ந்து 'பொன்'னாக மின்னிய அவிநாசியப்பரை தரிசித்த பக்தர்கள் 'அவிநாசியப்பருக்கு அரோகரா' என பக்திப்பரவசம் பொங்க கோஷமிட்டனர். கோவில் சிவாச்சாரியார்கள் கூறுகையில் 'உத்தராயண புண்ணிய காலத்தில் சூரிய பகவான் வடக்கு நோக்கி நகர்கிறார். பங்குனி முடிந்து சித்திரை மாத துவக்கத்தில் இருந்து ராசி மண்டலத்தில் புதிய பயணத்தை துவக்குகிறார்.

'அதற்காக சிவபெருமானை வணங்கும் பொருட்டு லிங்கத்திருமேனி மீது சூரியக்கதிர்கள் விழுகின்றன என்பது ஐதீகம். இன்னும் மூன்று நாட்கள் வரை இந்த அதிசயம் நிகழும். இந்த நேரத்தில் அவிநாசியப்பரை வழிபட்டால் நவக்கிரக தோஷம் நிவர்த்தியாகும்'.

Editor's Choice

விபத்தை தவிர்க்க, நம் நலனுக்காகவே எச்சரிக்கை பலகைகள் சாலையில் வைக்கப்பட்டிருக்கும். சற்று நேர பயணத்திற்கே அப்படியென்றால், வாழ்க்கைப் பயணத்திற்கு... ஒருநாள், கோவிலுார் ஆண்டவர் எனும் மகான் கனவில், கோவிலுாருக்கு அருகிலுள்ள சாளி என்ற ஊரில் எழுந்தருளியிருக்கும், அய்யனார் காட்சி தந்தார்.“

'அருகிலுள்ள கோவிலில் இருக்கும், அஞ்சாத பெருமாள் நான். என் முதுகில், இவ்வாறு புற்று வளர்ந்திருப்பது முறையா, பார்...' எனக்கூறி, தன் வடிவத்தை காட்டி, மறைந்தார்.

விழித்தெழுந்த ஆண்டவர், பொறுப்பாளரான நல்லான் என்பவரை அழைத்து, கனவில் கண்ட கோவிலுக்கு போய் பார்த்தார். அங்கே, கோவிலின் பின் சுவரில் வளர்ந்திருந்த புற்று, சுவாமியின் முதுகு வரை நீண்டிருந்தது.

புற்றை உதைத்துத் தள்ளிய ஆண்டவர், 'ஏன் இப்படி?' என, நல்லானிடம் கேட்டார்.
'குருநாதா... ஒப்பந்தம் பேசி, ஒருவரிடம் இந்த வேலைக்கான முழுத்தொகையையும் கொடுத்து விட்டேன். அவர் ஏமாற்றி விட்டார்...' என்று சொல்லி, வருந்தினார்.

ஒப்பந்தக்காரரை அழைத்து கண்டித்தார், ஆண்டவர்.

ஆனால், வேலையை துவங்காமல், ஏமாற்றிக் கொண்டிருந்தார், ஒப்பந்தக்காரர். இந்நிலையில் கருவுற்றிருந்த அவரது மனைவிக்கு உதிரப்போக்கு உண்டானது. மருத்துவம் பார்த்தனர்; பலனில்லை.
திருக்கோவிலுார் ஆண்டவரின், திருவடிகளில் விழுந்து வணங்கி, 'குருநாதா... மன்னித்து விடுங்கள். காப்பாற்றுங்கள்...' என்று வேண்டி, நடந்ததை சொன்னார், ஒப்பந்தக்காரர்.

சிறிதளவு விபூதியை அள்ளி ஒப்பந்தக்காரரிடம் தந்து, 'இதை, உன் வீட்டுக்கூரை மீது போட்டால், மனைவிக்கு நேர்ந்துள்ள இடையூறு நீங்கி, அழகான ஆண் குழந்தையை பெறுவாள். அக்குழந்தைக்கு, 'அஞ்சாத பெருமாள்' என, பெயர் சூட்டு...' என்றார், திருக்கோவிலுார் ஆண்டவர்.

விபூதியை வீட்டுக் கூரையின் மீது போட்டார், ஒப்பந்தக்காரர். அதே விநாடியில், கூரை தீப்பற்றி எரிய ஆரம்பித்தது. அதை அணைத்து, வீட்டுக்குள் சென்று, மனைவியைப் பார்த்தார். அப்பெண்மணியின் உதிரப்போக்கு நின்று, அவள் முகத்தில் மகிழ்ச்சி தெரிந்தது.

அலட்சியத்தை கை விட்டு, அதிவிரைவாக அய்யனார் கோவிலை சீர் செய்து முடித்தார், ஒப்பந்தக்காரர். அவர் மனைவிக்கு, சில நாட்களில் அழகான ஆண் குழந்தை பிறந்தது. குருநாதர் உத்தரவுப்படியே, அஞ்சாத பெருமாள் என, பெயர் சூட்டினார்.

திருக்கோவிலுார் ஆண்டவர் எனும் அம்மகானை தேடி, தெய்வங்களே நேருக்கு நேராக வந்து தரிசனம் தந்த, வரலாறு பல உண்டு. அன்போடு ஆயிரம் முறை சொன்னால் கேட்காத உலகம், தெய்வம் அச்சப்படுத்தத் துவங்கியவுடன், பயந்து, நல்லவிதமாக நடக்கிறது.

பக்கம் 2 / 15