Editor's Choice

ஏற்கனவே கொரோனா தொற்று ஏற்பட்டவர்கள் ‘தங்களுக்கு மீண்டும் கொரோனா தொற்று ஏற்படாது’ என்று அலட்சியமாக இருக்காமல், முகக்கவசம் அணிவது, தனி மனித இடைவெளி காப்பது, கைகளைச் சுத்தமாக வைத்துக்கொள்வது உள்ளிட்ட எச்சரிக்கைகளைத் தொடர்ந்து கையாள வேண்டியதும் அவசியமாகிறது. அவற்றோடு கீழ்க்காணும் 6 மருத்துவக் கட்டளைகளைப் பின்பற்ற வேண்டியதும் கட்டாயமாகிறது.

1. பிரச்னைகள் அறிவோம்!

கொரோனா வந்து குணமானவர்களில் சுமார் 35 சதவீதம் பேர் அடுத்த 3 மாதங்கள் வரை ‘முன்புபோல் உடல் இல்லை’ என்கின்றனர். இவர்களுக்கு இருமலும் மூச்சுத்திணறலும், நாட்படும் பிரச்னைகளாக மாறுகின்றன. உடல் எப்போதும் களைப்பாக இருக்கிறது. பசி குறைகிறது. செரிமானம் சரியில்லை. வயிற்றுப்போக்கு ஏற்படுகிறது.

தலைவலி, நெஞ்சுவலி, தசை வலி, மூட்டுவலி குடைகிறது. கவனக்குறைவு, மனக்குழப்பம், மறதி, மனப்பதற்றம், படபடப்பு ஏற்படுகின்றன. அவ்வப்போது லேசான காய்ச்சலும் சருமத்தில் அரிப்பும் தடிப்புகளும் உண்டாகின்றன. வாசனை தெரிவதில்லை. உறக்கம் வருவதில்லை. கால் விரல் பகுதிகளில் ரத்தம் கட்டுகிறது. ரத்த உறைவு மற்றும் நரம்பு தொடர்பான பிரச்னைகளும் எழுகின்றன. இதுவரை இல்லாமல் புதிதாக சிலருக்கு சர்க்கரை நோயும் உயர் ரத்த அழுத்தமும் துளிர்விடுகின்றன. பக்கவாதமும் மாரடைப்பும் எட்டிப் பார்க்கின்றன.

2. மறுபரிசோதனை அவசியம்.

இந்தப் பிரச்னைகளுக்குத் தீர்வு பெற கொரோனா தொற்றாளர்கள் குறிப்பிட்ட கால இடைவெளியில் மறுபரிசோதனைக்கு மருத்துவரிடம் செல்ல வேண்டியது முக்கியம். மீண்டும் ரத்தப் பரிசோதனைகள், நுரையீரல் சிடி ஸ்கேன், இசிஜி, எக்கோ எடுக்க வேண்டியது அவசியம். அப்போதுதான் கொரோனா கொடுத்த நோயின் தாக்கம் நாட்படுவதைத் தவிர்க்க முடியும். முக்கியமாக, இதயத்தைக் காக்க முடியும். மூளையையும் அதோடு தொடர்புடைய நரம்புகளையும் பாதுகாக்க முடியும். ஒருமுறை மீண்டுவந்த உயிராபத்தை மறுபடியும் தடுக்க முடியும்.

3. தேவை மூச்சுப் பயிற்சிகள்.

பொதுவாக, கொரோனா கிருமி நுரையீரலைத்தான் அதிகம் பாதிக்கிறது. தொடர் இருமல், மூச்சுத்திணறல் போன்ற அறிகுறிகளுடன் ஆக்ஸிஜன் சிகிச்சை பெற்றவர்களுக்கு நுரையீரலில் ‘ஃபைப்ரோசிஸ்’ (Fibrosis) எனப்படும் ‘நாரழற்சி’ ஏற்படுகிறது. எப்படியெனில், காற்றுப் பரிமாற்றம் சரியாக நிகழ நுரையீரல் திசுக்கள் முறையாக சுருங்கி விரிய வேண்டும். ஆனால், கொரோனா பாதிப்பாளர்களுக்கு மென்மையான திசுக்கள் இருக்க வேண்டிய இடத்தில், இறுகிப்போன நார்த்திசுக்கள் இடம் பிடிக்கின்றன. இவற்றுக்கு சுருங்கி விரியும் தன்மை இல்லை. ஆகவே இவை இருக்கும் நுரையீரலுக்குள் காற்று நுழைய வழியில்லை. ஒட்டுப்போட்ட கார் டயருக்கு வேகம் குறைவுதானே! அதுபோல் நாரழற்சி ஏற்பட்ட நுரையீரல் பகுதிக்கு சுவாசம் குறைவதுண்டு. இதனால் இவர்களுக்கு இருமலோ, மூச்சுத்திணறலோ நீடிப்பது உண்டு. இந்தப் பிரச்னையிலிருந்து விடுபட இவர்கள் மூச்சுப்பயிற்சிகளைச் செய்ய வேண்டியது கட்டாயம்.

மூச்சுப்பயிற்சிகளில் பிராணாயாமம் முக்கியமானது. இதை முறையாகப் பயின்று தினமும் காலை, மாலை தலா 15 நிமிடம் மேற்கொண்டால், பாதிப்புக்குள்ளான நுரையீரல்கள் விரியத் தொடங்கும்; அவை கூடுதலாகக் காற்றைப் பெற்றுக்கொள்ள வழி பிறக்கும். அப்போது இருமல் கட்டுப்படும்; மூச்சுத்திணறல் விடை பெறும்.

இப்படியும் செய்யலாம்….பலூனில் காற்றை ஊதி பயிற்சி செய்யலாம். ஸ்பைரோமீட்டர் கருவி மூலமும் காற்றை ஊதிப் பார்க்கலாம். குறைந்தது 6 மாதங்களுக்கு இவற்றை மேற்கொள்ள வேண்டும். பல்ஸ் ஆக்ஸிமீட்டரில் விரலை வைத்துப் பார்க்கும்போது ஆக்ஸிஜன் அளவு 95%க்கும் குறையாமல் இருக்க வேண்டும்.

4. நடைப்பயிற்சி நல்லது.

கொரோனா தொற்றாளர்கள் நோயிலிருந்து மீண்டுவந்தவுடன் முன்புபோல் பணிகளில் உற்சாகமாக ஈடுபட முடியாது. காரணம், இவர்களுக்கு நுரையீரல் மட்டுமன்றி இதயமும் பாதிப்புக்கு உள்ளாவதுதான். மத்தளத்துக்கு இரண்டு பக்கமும் இடி என்பதுபோல கொரோனா நேரடியாக இதயத்தைத் தாக்கி அழற்சியை உண்டாக்குவது ஒருபுறம் என்றால், பாதிப்புக்குள்ளான நுரையீரலிலிருந்து போதுமான ரத்தமும் ஆக்ஸிஜனும் கிடைக்காமல் இதயம் அவதிப்படுகிறது. இந்தப் பாதிப்பு உடலில் கொரோனா தொற்று மறைந்த பிறகும் நீடிக்கிறது. இதனால் இதயத்தின் செயல் திறன் குறைகிறது.

இந்த நிலைமையை நீடிக்க விடுவது நல்லதில்லை. ஆகவே, ஆக்ஸிஜன் சிகிச்சையில் இருந்த கொரோனா தொற்றாளர்கள் தினமும் அரை மணி நேரம் நடைப்பயிற்சி செய்ய வேண்டியது கட்டாயம். நடைப்பயிற்சியை ‘இரண்டாவது இதயம்’ என்று கூறுவார்கள். இதன் பலனால், இவர்களுக்கு ரத்த ஓட்டம் அதிகரித்து இதயத்துக்குத் தேவையான ஆக்ஸிஜன் கிடைத்துவிடும். அப்போது இதயத்துக்குச் சுமை குறையும். இரவு நேர இருமல், மூச்சுத்திணறல், படபடப்பு, நெஞ்சுவலி போன்ற தொல்லைகள் அடங்கும். உடலில் பழைய உற்சாகம் ஊற்றெடுக்கும்.

நடைப்பயிற்சி அல்லது மெல்லோட்டம் மேற்கொள்ளும்போது முகக்கவசம் அணிய வேண்டாம். இந்தப் பயிற்சிகளுக்குத் தனி நபராகச் செல்வது நல்லது. நண்பர்களுடன் கூட்டமாகச் சென்றால் தனி மனித இடைவெளி காக்க வேண்டியது முக்கியம். தூசும் மாசும் உள்ள இடங்களில் நடைப்பயிற்சி செய்யக்கூடாது.

5. ஊட்டச்சத்துள்ள உணவுகள் முக்கியம்.

கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் பலரும் ‘உடல் சக்தி இல்லாமல் இருக்கிறது’ என்கின்றனர். இந்தக் குறையை ஈடுகட்ட புரதச்சத்து மற்றும் ஊட்டச்சத்துள்ள உணவுகளை அதிகரிக்க வேண்டும். காலை டிபனுக்கு இட்லி, தோசை, ஊத்தாப்பம், பொங்கல், கிச்சடி, கேசரி, பருப்பு சாம்பார், சட்னி சாப்பிடுங்கள். தினமும் அரை லிட்டர் பால் குடியுங்கள். 2 முட்டை சாப்பிடுங்கள். மதிய உணவில் அரிசிச் சோற்றுடன் பாசிப்பருப்பு சாம்பார், தயிர். தினமும் இரண்டு வகை காய்களும் ஒரு பழமும் அவசியம். மாலையில் பயறு, சுண்டல், கொண்டைக்கடலை, காய்கறி சூப் அல்லது மட்டன் சூப். மீன், இறைச்சிகளை அடிக்கடி எடுத்துக்கொள்ளுங்கள். இடைவேளை உணவாக மஞ்சள் பால், மிளகுப் பால் அல்லது சுக்கு, இஞ்சி கலந்த தேநீர் குடிப்பது நல்லது. காபி, மது, புகைப்பழக்கம் வேண்டாம். இரவு டிபனுக்கு சப்பாத்தியும் காய்கறி குருமாவும். இவை எல்லாமே கொரோனா தொற்றாளர்களுக்கு உடலில் சக்தியை அதிகரிப்பதோடு நோய் எதிர்ப்பாற்றலையும் மேம்படுத்தும். கொரோனா மறுபடியும் தொற்றாத அளவுக்குப் பாதுகாப்பு கொடுக்கும்.

6. மன அமைதி காக்க…

கொரோனாவின் தாக்கம் மறைமுகமாக மனதையும் பாதிக்கிறது. நோயால் பாதிக்கப்பட்ட கவலை, நோய் குறித்த அச்சம் போன்றவை ஒருபுறம் என்றால், சிகிச்சையின்போது தனிமை, பணம் இழப்பு, பணி இழப்பு, சமூக விலகல், வருமானம் குறைந்ததால் எதிர்காலம் பற்றிய கவலை போன்றவையும் மனதளவில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்திவிடும். இந்த மாதிரியான சோகம் மிகுந்த மனநிலை நோய் எதிர்ப்பாற்றலை இன்னும் குறைத்துவிடும். இதனால் இவர்கள் எப்போதும் உள்ளம் சோர்ந்தும், உடல் சோர்ந்தும் காணப்படுகின்றனர். அடிக்கடி கோபப்படுகின்றனர். சில மாதங்கள் கழித்துத்தான் அந்த நிலையிலிருந்து மாறி இயல்புக்குத் திரும்புகின்றனர்.

அந்த நிலைமை நீடிக்காமல் இருக்க, இவர்கள் கொரோனா தொற்றிலிருந்து விடுபட்டதுமே தனிமை உணர்விலிருந்தும் விலகிவிட வேண்டும். தொலைத் தொடர்பு சாதனங்களுடன் சமூகத்துடனான நெருக்கத்தை அதிகப்படுத்திக்கொள்ள வேண்டும். குடும்பத்தாருடன், உறவினருடன், நண்பர்களுடன் உரையாடுவது, புத்தகம் வாசிப்பது, பிடித்த இசை கேட்பது ஆகியவை மனச்சோர்வுக்கு மருந்தாகும். பால் தயிராக வேண்டுமானால் உறை மோர் அவசியம். அதுபோல் மன அழுத்தம் மறைய ஆழ்ந்த உறக்கம் அவசியம். இதற்கு யோகா, தியானம் உள்ளிட்ட மன அமைதிப் பயிற்சிகள் உதவும்.

இறுதியாக, கடுமையான கொரோனா தொற்றிலிருந்து மீண்டுவந்ததுபோல் ஊரடங்கில் தாழ்ந்துபோன வாழ்வாதாரத்தையும் மீட்டுவிடலாம் என்ற நம்பிக்கைகொள்வது எல்லாவற்றையும்விட முக்கியம்.

டாக்டர் கு. கணேசன்,
மருத்துவ இதழியலாளர்,
ராஜபாளையம்.

Editor's Choice

காலையில் எழுந்ததும் மலம் போகாவிட்டால், பலருக்கு அந்த நாள் முழுவதும் எந்த வேலையும் ஓடாது. வெறும் வயிற்றில் லிட்டர் கணக்கில் தண்ணீர் குடிப்பார்கள். சூடாக காபி, தேநீர் அருந்துவார்கள். பீடி, சிகரெட் புகைப்பார்கள். இன்னும் சிலர் எப்படியாவது மலத்தை வெளியேற்றியே தீருவது என்று கங்கணம் கட்டிக்கொண்டு மூச்சை இழுத்துப் பிடித்து முக்குவார்கள்.

இந்தப் பகீரதப் பிரயத்தனங்கள் எதுவும் தேவையில்லை. தினமும் காலையில் எழுந்ததும் மலம் கழித்தே ஆக வேண்டும் என்கிற கட்டாயம் எதுவுமில்லை. மலம் காலையில் வரலாம். மாலையில் வரலாம். இரவிலும் வரலாம். ஒரு நாளைக்கு ஒருமுறை வரலாம். இருமுறை வரலாம். எதுவும் தப்பில்லை.

எது_மலச்சிக்கல்?

வழக்கத்துக்கு மாறாக மலம் வெளியேறாமல் இருப்பது. மலம் இறுகிப்போவது. மலம் கழிப்பதில் சிக்கல். மலம் முழுவதுமாகப் போகவில்லை என்கிற உணர்வு, மலம் கொஞ்சம்கூடப் போகாமல் ஆசனவாயை அடைத்துக்கொள்வது போன்ற நிலைமைகளை ‘மலச்சிக்கல்' என்று அழைக்கிறோம். மருத்துவ மொழியில் சொன்னால் ஒருவருக்கு வாரத்துக்கு மூன்று முறைக்குக் குறைவாக மலம் போவது ‘மலச்சிக்கல்'.

அடிப்படைக்_காரணம்

நாம் சாப்பிட்ட உணவு இரைப்பை, முன் சிறுகுடல், சிறுகுடல் என்று பயணம் செய்து தன்னிடமுள்ள சத்துகளையெல்லாம் ரத்தத்துக்குக் கொடுத்துவிட்டு, சக்கை உணவாகப் பெருங்குடலுக்கு வரும். அதில் 80 சதவீதம் தண்ணீர்தான் இருக்கும். இந்தத் தண்ணீரில் பெரும்பகுதியை உறிஞ்சி எடுத்துக்கொண்டு சுமார் 250 மி.லி. அளவில் மலத்தில் வெளியேற்ற வேண்டியது பெருங்குடலின் வேலை. சமயங்களில் அது தண்ணீர் முழுவதையும் உறிஞ்சிக்கொள்ளும். இதனால் மலம் கட்டியாகி மலச்சிக்கலை ஏற்படுத்தும். இப்படித் தண்ணீர் அதிகமாக உறிஞ்சப்படுவதை ஊக்கப்படுத்தப் பல காரணிகள் இருக்கின்றன. அவற்றைத் தவிர்த்தால் மலச்சிக்கல் ஏற்படாது. அந்தக் காரணங்கள்?

தூண்டும்_காரணிகள்

மலச்சிக்கலுக்கு முக்கியக் காரணி நம் உணவு முறை. கொழுப்பு மிகுந்த மேற்கத்திய உணவு வகைகளை அதிகமாகச் சாப்பிடுவது. பால் சார்ந்த உணவு வகைகளை அதிகமாகச் சாப்பிடுவது, பிட்ஸா, பர்கர், நூடுல்ஸ் போன்ற துரித உணவு வகைகளையும் பதப்படுத்தப்பட்ட உணவு வகைகளையும் அதிக அளவில் சாப்பிடுவது. நார்ச்சத்துள்ள உணவு வகைகளைக் குறைவாகச் சாப்பிடுவது. தண்ணீர் குறைவாகக் குடிப்பது. காய்கறி, கீரை, பழங்களைச் சாப்பிடாதது போன்ற தவறான உணவுப் பழக்கங்கள்தான் பலருக்கும் மலச்சிக்கலை உண்டாக்குகின்றன.

அடுத்து, தினமும் மலம் கழிக்கும் முறை சரியாக அமையாவிட்டால், அது நாளடைவில் மலச்சிக்கலுக்கு வழி வகுக்கும். குறிப்பாக, மலம் வருகிற உணர்வு உண்டாகும்போது கழிப்பறை அருகில் இல்லாதது, முக்கிய வேலையில் ஈடுபட்டிருப்பது, பயணத்தில் இருப்பது போன்ற காரணங்களால் மலம் கழிப்பதைத் தவிர்த்தால் காலப்போக்கில் பெருங்குடலில் உள்ள உணர்வு நரம்புகள் செயலிழந்து மலத்தை வெளியேற்ற வேண்டும் என்கிற உணர்வைத் தெரிவிக்காது. இதன் காரணமாக மலச்சிக்கல் ஏற்படும்.

பொதுவாகவே வயது ஆகஆக மலம் போவது குறையும். முதுமையில் உணவுமுறை மாறுவது, உடற்பயிற்சி குறைவது, தேவையான அளவுக்குத் தண்ணீர் குடிக்காதது மலச்சிக்கலுக்கு வழிவிடும். மூட்டுவலி, இடுப்புவலி உள்ள முதியவர்கள் அடிக்கடி மலம் கழிப்பதைத் தவிர்ப்பதால் அவர்களுக்கு மலச்சிக்கல் வருகிறது.

கர்ப்ப காலத்தில் மசக்கை காரணமாக தண்ணீர் அதிகமாகக் குடிக்காமல் இருப்பது, கருவில் வளரும் குழந்தை தாயின் குடலை அழுத்துவது, ஹார்மோன் மாற்றம், ஆசனவாய் சுருங்குதல் ஆகிய காரணங்களால் கர்ப்பிணிகளுக்குத் தற்காலிகமாக மலச்சிக்கல் உண்டாகலாம்.

வேறு உடல் பிரச்சினைகளுக்காக நாம் சாப்பிடும் மருந்துகளும் மலச்சிக்கலுக்குக் காரணமாகலாம். எடுத்துக்காட்டாக, வயிற்றுப் புண்ணுக்குச் சாப்பிடப்படும் ‘அலுமினியம்’, ‘கால்சியம்’ கலந்துள்ள ‘ஆன்டாசிட்’ மருந்துகள், இரும்புச்சத்து மாத்திரைகள், வயிற்றுவலி மாத்திரைகள், வலிப்பு மருந்துகள், மன அழுத்த மருந்துகள், ‘ஓபியம்’ கலந்த வலிநிவாரணிகள் மலச்சிக்கலை ஏற்படுத்துகிற மருந்துகளில் முக்கியமானவை. இன்னொன்று, மலச்சிக்கலைப் போக்குவதற்காக பேதி மாத்திரைகளைச் சாப்பிடுகிறோம். ஆனால், அந்த பேதி மாத்திரைகளை அடிக்கடி சாப்பிட்டாலும் மலச்சிக்கல் உண்டாகும்.

காய்ச்சல், வாந்தி, பசிக் குறைவு போன்ற பொதுவான பிரச்சினைகள் ஏற்படும்போதும், வெயிலில் அதிகம் அலையும்போதும் உடலில் நீர்ச்சத்து குறைந்துவிடும். அப்போது மலச்சிக்கல் ஏற்படும். மூல நோய், ஆசனவாய் வெடிப்பு, ஆசனவாய் சுருங்குதல், குடல் அடைப்பு, குடலில் கட்டி, பெருங்குடல் புற்றுநோய், ‘டைவர்ட்டிகுலைட்டிஸ்’ எனும் குடல் தடிப்பு நோய், சர்க்கரை நோய், தைராய்டு குறைவாகச் சுரப்பது, பேரா தைராய்டு அதிகமாகச் சுரப்பது, குடலிறக்கம், பித்தப்பைக் கற்கள், பார்க்கின்சன் நோய், மூளைத் தண்டுவட நோய்கள், மன அழுத்தம், தூக்கமின்மை ஆகிய பாதிப்புகள் இருக்கும்போது மலச்சிக்கல் ஒரு முக்கிய அறிகுறியாக வெளிப்படும்.

இளம் பெண்களுக்குப் பெருங்குடல் சுவரில் தளர்ச்சி ஏற்பட்டு ‘இடியோபதிக்டிரான்சிட் கோலன்’ எனும் நோய் வரலாம். அப்போது அவர்களுக்கு மலச்சிக்கல் உண்டாகும். குழந்தைகளுக்குத் தாய்ப்பாலை நிறுத்திவிட்டு செயற்கைப் புட்டிப்பால் தரப்படும்போது, மலச்சிக்கல் ஏற்படலாம். கழிப்பறையை எப்படிப் பயன்படுத்துவது என்று தெரியாத குழந்தை களுக்கு ஆரம்பத்தில் மலச்சிக்கல் வரலாம்.

வயதுக்குத் தேவையான உடற்பயிற்சி இல்லாதது, முதுமையின் காரணமாகவோ அல்லது நோயின் காரணமாகவோ படுக்கையில் நீண்டகாலம் படுத்தே இருப்பது போன்றவையும் மலச்சிக்கலை வரவேற்பதுண்டு.

எப்போதுகவனிக்கவேண்டும்?

மலச்சிக்கலை ஆரம்பத்திலேயே கவனிக்காவிட்டால் ஆசனவாயில் விரிசல் ஏற்பட்டு ரத்தக்கசிவு உண்டாகும். அஜீரணம், வாயுத் தொல்லை, வயிற்று உப்புசம், குடலிறக்கம், குடல் அடைப்பு, சிறுநீர் அடைப்பு, நெஞ்சுவலி, மயக்கம் ஏற்படலாம். எனவே, மலச்சிக்கலுடன் கீழ்க்காணும் அறிகுறிகள் தெரிந்தால் உடனே மருத்துவரிடம் பரிசோதித்துக்கொள்ள வேண்டும்:

1. மூன்று வாரத்துக்குமேல் மலச்சிக்கல் பிரச்சினை தொடரும்போது.

2. மலம் போவதில் சிக்கல் உண்டாகி வயிறு வலிக்கும்போது.

3. குமட்டல் மற்றும் வாந்தி வரும்போது.

4. மலம் கழிக்கும்போது ஆசனவாய் வலித்தால்.

5. மலத்துடன் ரத்தம், சீழ், சளி வெளியேறும்போது.

6. உடல் எடை குறையும்போது.

7. காய்ச்சல், தலைவலி, வாய்க் கசப்பு இருந்தால்.

8. மலச்சிக்கலும் வயிற்றுப்போக்கும் மாறிமாறி வந்தால்.

9. வயிற்று உப்புசம், பசிக் குறைவு இருந்தால்.

10. சுவாசத்தில் கெட்ட வாசனை வந்தால்.

சிசிச்சை

மலச்சிக்கலுக்குக் காரணம் தெரிந்து சிகிச்சை பெற்றால், நிரந்தரமாகக் குணப்படுத்தலாம். இப்போது மலச்சிக்கலுக்குப் பக்கவிளைவுகள் இல்லாத மருந்துகள் கிடைக்கின்றன. ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதத்தில் வேலை செய்கிறது. வயதைப் பொறுத்து, அடிப்படை நோயைப் பொறுத்து, மலச்சிக்கலின் தன்மையைப் பொறுத்து மருந்து தேவைப்படும். ஆகவே, மருத்துவரிடம் ஆலோசனை பெற்று மருந்து சாப்பிடுங்கள். மலச்சிக்கலுக்குச் சுயசிகிச்சை செய்ய வேண்டாம். குறிப்பாக, பேதி மாத்திரைகளை மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் சாப்பிடும்போது பெருங்குடலில் உள்ள உணர்வு நரம்புகளை அவை பாதிக்கும். பிறகு, சாதாரணமாக மலம் கழிப்பதும் சிரமமாகிவிடும். ‘எனிமா’ தர வேண்டிய அவசியம் ஏற்படும். அடிக்கடி `எனிமா’ தருவதும் நல்லதல்ல.

தவிர்ப்பது_எப்படி?

மலச்சிக்கலைத் தவிர்க்க, கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயம் ஒன்று உண்டு. ஆரோக்கியமாக உள்ள ஒருவர் சரியான உணவு முறையைப் பின்பற்றி, தேவையான அளவுக்குத் தண்ணீர் குடித்து, தினமும் உடற்பயிற்சி செய்து, மலம் கழிக்க வேண்டும் என்கிற உணர்வு வந்ததும் மலம் கழித்துவிடுகிற பழக்கத்தைப் பின்பற்றினாலே போதும். தினமும் சரியான / முறையான நேரத்தில் மலம் கழிப்பது வழக்கமாகிவிடும். இதன் பலனால், அவருக்கு மலச்சிக்கல் ஏற்படுகிற வாய்ப்பு 90 சதவீதம் குறைந்துவிடும்.

நார்ச்சத்து

நாம் சாப்பிடும் உணவு வகைகளில் நார்ச்சத்து நிறைந்த கோதுமை, கேழ்வரகு. தினை, வரகு, கொள்ளு போன்ற முழுத் தானிய உணவு வகைகள் மலச்சிக்கலைத் தவிர்க்க உதவும் (தவிடு நீக்கப்பட்ட தானியங்களில் நார்ச்சத்து இல்லை என்பதைக் கவனத்தில் கொள்ளுங்கள்). வாழைத்தண்டு, காரட், முள்ளங்கி, முட்டைக்கோஸ், பாகற்காய், புடலங்காய், அவரைக்காய், கொத்தவரங்காய் போன்ற காய்கறிகள், பொட்டுக்கடலை, கொண்டைக்கடலை, மொச்சை போன்ற பருப்புகள், கீரைகள், ஆரஞ்சு, கொய்யா, மாதுளை, ஆப்பிள், அத்திப்பழம், பேரீச்சை, மாம்பழம் போன்ற பழங்களில் நார்ச்சத்து அதிகம். இவற்றை தினசரி உணவில் அதிகமாகச் சேர்த்துக்கொள்ள வேண்டும். மிளகு, ஓமம், கொத்துமல்லி, மிளகாய் போன்றவற்றிலும் நார்ச்சத்து அதிகம். இவற்றில் தயாரிக்கப்பட்ட உணவு வகைகளை அதிகப்படுத்தவேண்டும். உதாரணம்: மிளகு ரசம், கொத்துமல்லிச் சட்னி.

தினமும் 3 லிட்டருக்குக் குறையாமல் தண்ணீர் குடிக்க வேண்டும். காபி, தேநீர், மென்பானங்கள் குடிப்பதைக் குறைத்துக்கொண்டு, இளநீர், பழச்சாறுகள் குடிப்பதை அதிகப்படுத்த வேண்டும். இனிப்பு வகைகளையும் கொழுப்பு உணவுகளையும் குறைத்துக்கொள்ள வேண்டும். விரைவு உணவு வகைகளைத் தவிர்க்க வேண்டும். இரவில் இரண்டு பழங்களைச் சாப்பிட வேண்டும். வாழைப்பழம்தான் சாப்பிட வேண்டும் என்பதில்லை. பருவத்துக்குத் தகுந்த எந்தப் பழத்தையும் சாப்பிடலாம்.

தினமும் நடைப்பயிற்சி செய்ய வேண்டியது மிக அவசியம். இயலாதவர்கள் வீட்டிலேயே செய்யக்கூடிய உடற்பயிற்சிகளைச் செய்யலாம். புகைபிடிக்கக் கூடாது. மது அருந்தக் கூடாது. தேவையில்லாமல் வெயிலில் அலையக் கூடாது. மலம் கழிப்பதற்கு என்று போதுமான நேரத்தை ஒதுக்க வேண்டியது மிகவும் முக்கியம். வேலை அவசரம் காரணமாகக் குறைந்த நேரத்தில் மலம் கழிக்கக் கூடாது. மலம் கழிக்க வேண்டும் என்ற உணர்வு வந்துவிட்டால் அதை அடக்காதீர்கள். காலை நேரமானாலும் சரி, மாலை நேரமானாலும் சரி தினமும் ஒரே நேரத்தில் கழிப்பறைக்குச் செல்லும் வழக்கத்தை உண்டாக்கிக்கொண்டால் அடுத்தடுத்த நாட்களிலும் அதே நேரத்தில் மலம் வந்துவிடும்.

Editor's Choice

பச்சிளம் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் சாப்பிட வேண்டும் என மருத்துவர்களால் பரிந்துரைக்கக்கூடிய ஒரு உணவு எதுவென்றால் அது இதுவாகத்தாக் இருக்க முடியும்!

ஏன் தவிர்க்க முடியாத சூழலில், ஊட்டச்சத்துக்காக, இதனை உணவில் சேர்த்துக்கொள்ளுங்கள் என சைவ உணவு உண்பவர்களுக்கும் மருத்துவர்கள் பரிந்தரைக்கும் உணவுதான் அது.எண்ணிலாப் பலன்களைத் தக்கவைத்துக்கொண்டுள்ள அந்த உணவு முட்டை.

உலக முட்டை தினம் (World egg day)

உலக முட்டை தினம் ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் இரண்டாவது வெள்ளிக்கிழமை அன்று கொண்டாடப்படுகிறது. அதன்படி இன்று உலக முட்டை தினம் கொண்டாடப்படுகிறது.

வருடத்திற்கு 180 முட்டை (180 egg for year)

இந்தியாவில் மொத்த உள்ள 851 மில்லியன் கோழிகள் மூலம் கடந்த வருடம் மொத்தம் 103.32 பில்லியன் முட்டைகள் உற்பத்தி செய்யப்பட்டன.இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (IMC)தனிநபர் ஒருவருக்கு தினசரி தேவை 0.5 முட்டை என்ற அளவில் பரிந்துரை செய்கிறது. அதாவது வருடத்திற்கு 180 முட்டை ஒரு நபருக்கு தேவை.

இந்தியா முழுவ திலும் உள்ளவர்களுக்கு கிடைக்கும் சராசரி அளவு 79 முட்டைகள் ஒரு வருடத்திற்கு ஆகும். இது பரிந்துரைக்கப்பட்ட அளவை விட மிகவும் குறைவு.
தமிழகத்தில் மொத்தம் 12.08 கோடி கோழிகள் இருப்பதால், இந்த மாநிலத்தைச் சேர்ந்தவர்களுக்கு ஒரு நபருக்கு கிடைக்கின்ற முட்டையானது 246 (ஒரு வருடத்திற்கு என்று உள்ளது

ஊட்டச்சத்துக்கள் (Nutrients)

கலோரி-72-80 கிலோ, புரதம் - 6.3 கிராம், கார்போஹைட் ரேட்டுகள் - 0.6 கிராம், மொத்த கொழுப்பு - 5.0 கிராம், மோனா நிறைவுறா கொழுப்புகள் - 2.0 கிராம், பாலில் நிறைவுறா கொழுப்புகள் 0.7கிராம், நிறைவுற்ற கொழுப்பு - 1.5கிராம், கொலஸ்டிரால் 213 மில்லி கிராம் மற்றும் சோடியம் 63 மில்லி கிராம்.

வைட்டமின் மாத்திரை (Vitamin Tablet)

பல சத்துக்களைக் கொண்ட முட்டையானது மிகவும் தரமான புரதசத்தினை மனிதர்களுக்கு தரக்கூடியதாகும். அனைத்து வயதினருக்கும் அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் தரக்கூடிய நிலையான மூலப்பொருள் முட்டை. மனித உடலுக்குத் தேவையான வைட்டமின், சத்துக்கள், ஆக்ஸிஜனேற்றிகள் அனைத்தும் முட்டையில் உள்ளதால் முட்டை வைட்டமின் மாத்திரை என்றே அழைக்கலாம்.

முட்டையில் உள்ள கோலின் என்ற வைட்டமின், மனிதனின் நரம்பு மண்டல வளர்ச்சிக்கு மிகவும் தேவையானது. இதனால் பெண்களின் கர்ப்ப காலத்தில், குழந்தைகளுக்கு முட்டையை கொடுப்பதினால் கோலினுடைய தேவை பூர்த்தி ஆகிறது.

வைட்டமின் மாவின் குறைபாடு தற்காலத்தில் அதிகளவில் கண்டறிப்படுகிறது. முட்டையில் வைட்டமின் D அளவு இயற்கையாகவே அதிகமாகவே இருப்பதால், அதனை உட்கொள்ளும் பொழுத வைட்டமின் D தேவையும் பூர்த்தியாகிறது.

முட்டையில் உள்ள ஊட்டச்சத்துக்களின் அடர்த்தி, மனித உடலின் அதிகமான ஜீரணிக்கும் திறன், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்துதல் மற்றும் ஊட்டச்சத்து குறைபாடுகளை நிவர்த்தி செய்தல் ஆகிய காரணங்களால் தற்போதுள்ள கொரோனா பாதிப்பு காலங்களில் முட்டையினை நமது அன்றாட உணவில் சேர்த்துக்கொள்வது மிகவும் அவசியமாகும்.

Editor's Choice

நகர மற்றும் கிராமவாசிகள் பலரும் தங்களது வீட்டிலோஅல்லது மொட்டை மாடியிலோத் தோட்டத்தை அமைத்து தங்களுக்கு தேவையான புத்தம் புதிய நஞ்சில்லா காய்கறிகளை உற்பத்தி செய்யும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

சராசரியாக ஒருநபர் நாள் ஒன்றுக்கு 400 கிராம் காய்கறி மற்றும் பழங்கள் சாப்பிடவேண்டும் என்று உலக உணவு அமைப்பு (WFO) கூறுகிறது. நாம் அவ்வாறு செய்கிறோமா? இல்லை. காய்கள் உற்பத்தியில் இந்தியா உலகில் இரண்டாவது இடத்தில் இருந்தும் அவற்றை உபயோக படுத்தத் தவறிவிட்டோம். இதனால் சிறுவர்கள் மற்றும் முதியோருக்கு சத்துக்கள் சரிவர கிடைப்பதில்லை.

எனவே நாம் வீட்டிற்கு வீடு தோட்டம் அமைத்து உற்பத்தி பெருக்கிட சில செலவில்லாத யுத்திகளைக் கையாள வேண்டும்.

  • பூசணி, சுரைக்காய், பீர்க்கங்காய், பாகல் போன்ற கொடி வகைக் காய்கறிகளில் அயல் மகரந்தச் சேர்க்கை முலமாக காய் கள் உருவாக்கும் முயற்சியில் தேனீக்களின் உதவி தேவை.

  • எனவே வாய்ப்பு இருக்கும் இடங்களில் தேனிப்பெட்டிகளை வைத்து வளர்க்கலாம். நமக்கு ஒரே கல்லில் இரண்டு மாங்காய்.

  • அதாவது மாதந்தோறும் தேனும் கிடைக்கும் காய்களும் கிடைக்கும்.

  • கொடி வகைச் செடிகளில் 10 முதல்12 இலைகள் வளர்ந்த பிறகு அதன் நுனியை கிள்ளி விட வேண்டும் .

  • இதற்கு பிறகு அந்த நுனியில் இருந்து வலது அல்லது இடது பக்கத்தில் உருவாக்கும் கிளையில் இருக்கும் 10- 12வது இலைகளில் அடுத்த நுனியை கிள்ளிவிடவேண்டும்.

  • இது போல் மூன்றாம் முறையாக நுனியை கிள்ளிய பின்னர் நுனியை கிள்ளத்தேவை இல்லை.

  • 1 மற்றும் 2வது நுனியைக் கிள்ளாமல் இருந்தால் அதிக அளவில் ஆண் பூக்கள் உற்பத்தியாகி இருக்கும். சரியான மகசூல் கிடைக்காது.

  • அதற்கு பிறகு வருகின்ற 3மற்றும்4வது கிளையில் அதிக பெண் பூக்கள் உருவாகி தரமான காய் கனி கிடைக்கும்.

  • நாம் இந்த மாதிரி கிள்ளி விடாமல் இருந்தால் காய் குறைந்த அளவில் உற்பத்தியாகி ‍‍‌ஒழுங்கற்ற வடிவில் உண்டாகும். எனவே இந்த யுத்திகளைக் கையாள வேண்டும்.

  • சாம்பல் பொட்டுகள்

  • காய்கள் முற்றியநிலைய அறிந்து கொள்ள அதன் மீது உள்ள சாம்பல் பொட்டுகள் உதிர் வதில் இருந்து தெரிந்து கொள்ளலாம்.

  • காய் கறி பயிர்களுக்கு வேம்பு சார்ந்த பூச்சி கொல்லிகள் மட்டுமே பயன்படுத்த வேண்டும்.

அக்ரி சு ‌.சந்திரசேகரன், வேளாண் ஆலோசகர்
அருப்புக்கோட்டை, 9443570289

Editor's Choice

நாடு முழுவதும் 1.67 கோடி விவசாயிகள் e-NAM மின்னணு சந்தையின் கீழ் பதிவு செய்துள்ளனர் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது

நாட்டின் உணவுப் பாதுகாப்பை உறுதி செய்வதில் விவசாயிகள் பங்கு குறிப்பாக இந்த கோவிட்-19 காலத்தில் அளப்பரியது. விவசாயிகளின் வருமானத்தை இருமடங்காக்க மத்திய அரசு பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது.இதன் ஒருபகுதியாக அறிமுகப்படுத்தப்பட்ட e-NAM தளத்தில் இந்தியா முழுவதும் 1.67 கோடி விவசாயிகள், 1.45 லட்சம் வர்த்தகர்கள் உள்பட 1.69 கோடி பேர்  பதிவு செய்துள்ளனர்.

தமிழக விவசாயிகள் (TamilNadu farmers)

e-NAM எனப்படும் தேசிய வேளாண் சந்தை என்னும் வேளாண் பொருட்களுக்கு தற்போது உள்ள சந்தைகளை ஒருங்கிணைக்கும் ஒரு நாடு ஒரே சந்தை திட்டம் பிரதமர் நரேந்திர மோடியால் கடந்த 2016ம் ஆண்டு தொடங்கிவைக்கப்பட்டது. தமிழகத்தில், 2.15 லட்சம் விவசாயிகள், 2912 வர்த்தகர்கள், 98 விவசாயிகள் உற்பத்தி அமைப்புகள், 33 கமிசன் முகவர்கள் உள்பட 2.19 லட்சம் பேர் இதில் பதிவு செய்து உள்ளனர்.

நோக்கம்

வேளாண் பொருள்களுக்காக ஒருங்கிணைந்த தேசிய சந்தையை உருவாக்குவது என்பதே e-NAM தளத்தின் முக்கிய நோக்கம். தற்போதைய ஒருங்கிணைந்த சந்தைகளின் நடைமுறை களை ஒழுங்குபடுத்துவதன் மூலம் வேளாண் சந்தைப்படுத்துதலில் ஒரே சீரான நடைமுறையை உருவாக்க முடியும் என நம்பப்படுகிறது. எனவே விவசாயிகள் அல்லது வர்த்தகர்கள் http://www enam.gov.in அல்லது கைபேசி செயலி மூலம் e-NAM தளத்தில் பதிவு செய்து கொள்ளலாம். நேரடிச் சந்தை மண்டி பதிவு மூலமும் பதிவு செய்யலாம்.

கட்டணம் இல்லை (No fare)

இ-நாம் பதிவுக்கு கட்டணம் ஏதுமில்லை. பெயர். பாலினம், முகவரி, பிறந்த தேதி, கைபேசி எண், வங்கி கணக்கு விவரங்கள் தெரிவிக்கப்பட வேண்டும். தற்போது 175 பொருட்கள் e-NAM வர்த்தகத்தில் இடம் பெற்று உள்ளன. 

பாசுமதி அரிசி, கோதுமை, பார்லி, குதிரை தானியம் உள்ளிட்ட 26 உணவுப் பொருட்கள், ஆமணக்கு, பருத்தி, கடுகு, வேம்பு போன்ற 14 எண்ணெய் வித்துக்கள், கொய்யா, மா, பலா, வாழை, ஆப்பிள் திராட்சை போன்ற பழங்கள், தக்காளி, உருளை, வெங்காயம், பூசணி, இஞ்சி போன்ற 50 காய்கறிகள், மிளகு, ஏலக்காய், மஞ்சள் போன்ற 16 மசாலா பொருட்கள் உள்ளட்டவை இதில் அடங்கும். இதன் மூலம் அதிக விற்பனையாளர்கைள அணுகக் கூடிய வாய்ப்பு விவசாயிகளுக்கு கிடைக்கிறது.

Editor's Choice

செப்டம்பர் 29: உலக இதய தினம்

சீனாவில் கரோனா வைரஸ் பரவத் தொடங்கிய ஆரம்பக் காலத்தில் அது நுரையீரலைத் தாக்கும் புதியதொரு வைரஸ் என்று மட்டுமே அறியப்பட்டது. அதன் பாதிப்புகள் உலக அளவில் தீவிரமானதும், அது ரத்தக்குழாய் வழியாக உடலுக்குள் புகுந்து இதயம், மூளை, சிறுநீரகம் எனப் பலதரப்பட்ட உறுப்புகளையும் தாக்கக்கூடிய வேறுபட்ட வைரஸ் என்பது தெரியவந்தது. முதன்முதலில், இத்தாலியில் கரோனா தொற்றால் இறந்துபோன ஒருவரின் உடலை ஆராய்ந்தபோது அவரது ரத்தக் குழாய்களில் ரத்தக் கட்டிகள் காணப்பட்டதும், இதயத்தில் அழற்சி (Myocarditis) தோன்றியிருந்ததும் அதை உறுதிப்படுத்தியது.

உலகில் ஆண்டுதோறும் இதய நோய்களால் ஒரு கோடியே 70 லட்சம் பேர் இறக்கின்றனர். அத்தோடு கரோனா பாதிப்பும் சேர்ந்துகொண்டால் இந்த எண்ணிக்கை இன்னும் கூடுதலாகிவிடும் என்ற எச்சரிக்கை உணர்வில் கரோனா தொற்றாளர்களுக்கு நுரையீரலுக்கு மட்டுமன்றி இதயத்துக்கும் பாதுகாப்பு கொடுப்பது அவசியம் என உலக சுகாதார நிறுவனம் அறிவித்தது. அதைத் தொடர்ந்து, ரத்தம் உறைவதன் வழியாக கரோனா தொற்றாளர்களுக்கு மரணம் ஏற்படுவதைத் தவிர்ப்பதற்கு ரத்த உறைவைத் தடுக்கும் மருந்துகள் வழங்கப்படுவது வாடிக்கையானது.

பொதுவாக, ஆக்ஸிஜன் இல்லாமல் இதயம் அவதிப்படும்போது அதன் தசைகள் அழியத் தொடங்கும். அப்போது, ரத்தத்தில் ட்ரோபோனின் (Troponin) எனும் இதய நொதி அதிகரிக்கும். ஒருவருக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளது என்று அறிவிக்கும் முக்கியத் தடயம் இது. கரோனா தொற்றாளர்களில் பலருக்கும் இந்த நொதி அதிகமாகக் காணப்பட்டதாலும் அவர்களில் பெரும்பாலானோர் மாரடைப்பால் மரணம் அடைந்ததாலும் கரோனா வைரஸ் இதயத் தசைகளைப் பாதிப்பது உறுதியானது. ஆனால், அது கரோனாவின் நேரடித் தாக்குதல் இல்லை; கரோனாவுக்கு எதிராகப் புயலெனக் கிளம்பும் தடுப்பாற்றல் புரதங்கள் உண்டாக்கும் அழற்சி நிலை என்றே கருதப்பட்டது. அதனால், கரோனா சிகிச்சையில் அழற்சியைக் கட்டுப்படுத்தும் ஸ்டீராய்டு மருந்துகள் புகுந்தன.

அண்மையில், இந்தப் புரிதலில் ஒரு மாற்றம் ஏற்பட்டுள்ளது. கரோனா வைரஸ் நேரடியாகவும் இதயத்தைத் தாக்கக்கூடும் என்பதே அது. சான்ஃபிரான்சிஸ்கோவில் கிளாட்ஸ்டோன் ஆராய்ச்சி நிறுவனம் (Gladstone Institute) செயற்கையாக வளர்க்கப்பட்ட இதயத் தசைகளுக்குள் கரோனா கிருமிகளைச் செலுத்தி ஆய்வு செய்தபோது இதய செல்கள் எல்லாமே அணில் கொறித்த பழம்போல் சிறு சிறு துண்டுகளாகப் பிளந்து காணப்பட்டன. இதுவரை எந்த ஒரு வைரஸ் பாதிப்பிலும் காணப்படாத அரிய தோற்றம் இது. இதேபோன்று ஜெர்மனியில் 49 வயது இளைஞருக்கு கரோனா பாதித்தபோது எடுக்கப்பட்ட எம்.ஆர்.ஐ. படத்திலும் இதயத் தசைகள் பாதிக்கப்பட்டிருப்பது தெரியவந்தது.

உடலியல் செயல்பாட்டின்படி இதய செல்கள் ஒருமுறை இறந்துவிட்டால் அது நிரந்தர இழப்பாகிவிடும். கல்லீரல்போல் மறுவளர்ச்சிக்கு அங்கு வழியில்லை. இந்தக் கொடிய விளைவால் கரோனாவிலிருந்து மீண்டவர்களுக்கு இதயத் தசைகள் வீங்குவது (Cardiomyopathy), சீரற்ற இதயத் துடிப்பு (Atrial fibrillation) எனத் தொடர் பாதிப்புகள் ஏற்பட்டு நாட்பட்ட இதய நோயாக மாறிவிடுகிறது. அப்போது இதயம் இயல்பாகச் சுருங்கி விரியும் தன்மையை இழக்கிறது. இதய விசை குறைந்து, உடலுக்குள் அனுப்பப்படும் ரத்த அளவும் குறைந்து போகிறது. இதனால், பயனாளிக்குக் கடுமையாகச் சோர்வு ஏற்படுகிறது; மாடி ஏறினால் மூச்சு வாங்குகிறது; சிறிது வேகமாக நடந்தால்கூட நெஞ்சு வலிக்கிறது; அதிகம் வியர்க்கிறது.

இந்த ஆய்வின் அடுத்த புரிதல் என்னவென்றால், இம்மாதிரியான பாதிப்புகள் ஏற்கெனவே இதய நோய் உள்ள கரோனா தொற்றாளர்களுக்குத்தான் ஏற்படும் என்பதில்லை; இதுவரை இதய நோய் இல்லாதவர்களுக்கும் கரோனா தொற்று ஏற்பட்ட பிறகு புதிதாக உருவாகக்கூடும் என்பது. 27 வயது நிரம்பிய நைஜீரிய-அமெரிக்கக் கூடைப்பந்து வீரர் மைக்கேல் ஓஜோ கரோனாவிலிருந்து மீண்ட பிறகு மாரடைப்பில் இறந்தது இதை உறுதிப்படுத்தியது.

‘ஸ்டாடின்’ தரும் பாதுகாப்பு

இதய நோய், நீரிழிவு, உடற்பருமன் போன்ற துணை நோய்கள் உள்ளவர்களுக்கு கரோனாவின் பாதிப்பு தீவிரமாக இருக்கும் என்று நம்பப்படும் சூழலில் அமெரிக்காவில் நடைபெற்றுள்ள ஸ்டாடின் குறித்த ஆய்வு ஒன்று முக்கியத்துவம் பெறுகிறது. வழக்கமாக இதயத் தமனி நோய் (CAD) உள்ளவர்களுக்கும், கொலஸ்ட்ரால் கூடுதலாக இருப்பவர்களுக்கும் ஸ்டாடின் வகை மருந்துகளைக் கொடுப்பது உண்டு. இந்த மருந்துகள் ரத்த கொலஸ்ட்ராலைக் கட்டுப்படுத்தி, இதயத் தசைகளுக்கு ரத்த ஓட்டம் தடைப்படாமல் பார்த்துக்கொள்வதால் மாரடைப்பு தவிர்க்கப்படுகிறது.

கலிபோர்னியாவில் சான் டய்கோ மருத்துவ மையத்தில் (San Diego Medical Centre) நடைபெற்ற அந்த ஆய்வில் ஸ்டாடின் மருந்துகளுக்கு கரோனா வைரஸை நேரடியாகத் தாக்கி அழிக்கும் திறன் உள்ளது அறியப்பட்டுள்ளது. எப்படியெனில், கரோனா கிருமிகள் மனித செல் உறைகளில் உள்ள ‘ஏஸ்2’ (ACE2) புரத ஏற்பிகளோடு இணைவதை ஸ்டாடின் மருந்து தடுத்துவிடுகிறது; அங்குள்ள கொழுப்பை அகற்றிவிடுகிறது. ஆகவே, கரோனா கிருமிகள் இவர்கள் உடலுக்குள் அவ்வளவு எளிதாக நுழைய முடிவதில்லை. இதன் பலனால், இவர்களுக்கு கரோனாவின் பாதிப்பு பாதி அளவுக்குக் குறைந்துவிடுகிறது. நோய் விரைவில் குணமாகவும் இது வழி அமைக்கிறது.

கரோனா தொற்றைக் குணப்படுத்த இன்னும் சரியான மருந்து கண்டுபிடிக்கப்படாத நிலையில் ஏற்கெனவே வழக்கத்தில் உள்ள ஸ்டாடின் மருந்து இரட்டைப் பாதுகாப்பு தருகிறது எனும் செய்தி ஆறுதல் அளிக்கிறது.

இவை போன்று, உறுதியான புதிய ஆய்வுகள் வெளிவரும்போது கரோனா சிகிச்சையிலும் புதிய நெறிமுறைகள் புகுத்தப்படுவது இயல்பு. இதன்படி, ‘ஃபெவிபிரவீர்’, ‘ரெம்டெசிவீர்’ போன்ற வைரஸ் எதிர்ப்பு மருந்துகளை கரோனா தொற்றியதுமே எடுத்துக்கொள்ள வேண்டியதும், கரோனாவில் மீண்டவர்கள் அனைவரும் மருத்துவர் கூறும் கால இடைவெளியில் மறுபரிசோதனைகள் செய்துகொள்ள வேண்டியதும் தற்போது கட்டாயமாகியுள்ளது.

நம் சுகாதாரத் துறை இதற்கான ஏற்பாடுகளைப் பெருநகரங்களில் செய்துவருகிறது. இவற்றை மாவட்ட அளவிலும் நகராட்சி அளவிலும் நீட்டித்தால் சிறு நகரங்களில், கிராமங்களில் வசிப்பவர்களுக்கும் பாதுகாப்பு கிடைக்கும். மக்களும் மறுபரிசோதனைகளை அலட்சியப்படுத்தாமல் அக்கறையுடன் செயல்பட வேண்டும். அப்போதுதான் இதயத்தைக் காப்பாற்ற முடியும்.

- கு.கணேசன், பொதுநல மருத்துவர். இராஜபாளையம்

தொடர்புக்கு : இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

 

பக்கம் 6 / 15