Editor's Choice
“மேற்குத் தொடர்ச்சி மலையில் ஒரு புலி இறந்தால் தஞ்சை டெல்டாவில் பத்தாயிரம் ஏக்கர் நிலம் தரிசாகப் போய் விடும்” எப்படி?
 
இதென்ன கயாஸ் தியரி?
 
அறியாதவர்கள் கவனமாகப் படித்து உயிர்ச் சங்கிலியின் சாராம்சத்தை மனசுலே ஏத்திக்கோங்க.
 
மனிதன் வேட்டைச் சமூகமாக இருந்த காலத்தில் பிற உயிரினங்களைப் போலவே அவனது நீர்த்தேவையும் குறைவாகவே இருந்தது. குடிக்க, சமைக்க அரிதாகக் குளிக்க! அவன் வேளாண் சமூகமாக மாறிய பிறகு தான்,பிற உயிரினங்களுக்கான நீரையும் அபகரிக்கும் அளவு அவனது நீர்த்தேவை அதிகமாக உயர்ந்தது.
 
தமிழகத்துக்கான மொத்த நீர்த்தேவையில் 70% நீரைத் தருவது தென்மேற்குப் பருவக் காற்று கொண்டு வந்து சேர்க்கும் மழை மேகங்கள் தாம். அந்த மேகங்களைத் தடுத்து நிறுத்தி, குளிர்வித்து மழையாகப் பெற்று, அதைத் தன்னுள் சேமித்து ஊற்றாக மாறி ஆறாக நமக்கு அனுப்பி வைப்பது மேற்குமலைத்தொடர் மலையும்,காடும்.
 
பிரபஞ்சவெடிப்பில் உருவான மலைத்தொடர்கள் உடல் எனில் அதிலுள்ள காடுகள் அதன் உயிர். நித்தமும் ஒவ்வொரு நொடியும் அவை தன்னைப் புதிதாக உருவாக்கி உயிர்ப்பித்துக் கொண்டே இருக்கின்றன.
 
அது எப்படி?
 
முதன்முறை உருவான காடுகள் தேனீக்களாலும், பறவைகளாலும் பரந்து உருவாகியிருக்கும். சரியா?
 
அப்படி உருவான காடுகள் அடர்ந்து வளர்ந்த பிறகு, சூரியஒளி உட்புக வழியில்லாமல், புதிய செடிகள் முளைத்திருக்காது தானே! எனில், முதன்முறை உருவான காடு மீண்டும் உருவாக எத்தனை நூறாண்டுகள் தேவைப்படும்? இதற்குத் தான் மான், பன்றி, முயல் போன்ற தாவரப் பட்சிணிகளை இயற்கை உருவாக்கிக் கொண்டது.
 
இவைகள் மரங்களின் ஊடாகப் புகுந்து சிறு செடி, கொடி, கிழங்களைப் பிய்த்துத் தின்ன, அதனால் உருவாகும் இடைவெளியில் சூரியஒளி புகுந்து தக்க ஈரப்பதத்தை உருவாக்கி, பூஞ்சைக்காளான், சிறுசெடி, கொடிகளுக்கு உயிர் அளிக்க அந்த அடர்ந்த வனம் மீண்டுமொரு முறை உயிர்ப்பிக்கப்படுகிறது.
 
சரி! இப்போது காட்டுக்கு புலியின் தேவை எங்கிருந்து வந்தது? சைவ பட்சிணிகளின் வரம் / சாபம் எந்நேரமும் தின்று கொண்டேயிருப்பது.. எப்போதும் இனப்பெருக்கம் செய்து கொண்டே இருப்பது. அப்படி அளவுக்கு அதிகமான மான், பன்றி, முயல்கள் உருவானால் சிறுசெடியைக் கூட தப்ப விடாமல் மேய்ந்து விடுமே!
 
இவற்றைக் கட்டுப்படுத்தத் தான் காடு தனது காப்பாளனாக புலியை உருவாக்கிக் கொண்டது. கிரிக்கெட்டில் தோனி போல காட்டில் புலி! அப்படியொரு ஜென்டில்மேன் அது. பசித்தால் தான் வேட்டையாடும். பசித்தாலும் சூள் கொண்ட மானைக் கொல்லாது. சில நேரங்களில் இளம் மான் குட்டிகளோடு விளையாடுமளவு பெருந்தன்மையானது.
 
காட்டிலுள்ள சிறுத்தை, நரி போன்ற இதர மாமிசப்பட்சிணிகளைக்கூட சிறுவிலங்கு வேட்டைக்காக உடன் வசிக்க பெருந்தன்மையாகப் புலி அனுமதித்திருக்கிறது. ஆனால், மனிதனோ வெறும் அரைபாட்டில் பிராந்திக்காக புலியையும் கொல்வான்! மானையும் கொல்வான். எனவே தான் மனிதன் ஒரு மகத்தான சல்லிப்பயல் ஆகிறான்.
 
ஒரு புலி உயிர் வாழ ஆயிரம் சதுரகிலோமீட்டர் காடு தேவை. அத்தனைப் பெரிய பரப்பளவை பராமரித்து ஆண்டு ஆட்சி செய்கிறது ஒற்றைப் புலி! ஒரு காட்டின் ஆரோக்கியம் அதில் எத்தனைப் புலிகள் வசிக்கின்றன எனும் எண்ணிக்கையில் தான் கணக்கிடப்படும். எனவே தான் ஒரு புலி இறந்தாலும் நாம் பதற வேண்டியிருக்கிறது..
 
ஆக, புலிகள் இல்லையெனில் மேற்குமலைக்காடுகள் இல்லை! காவிரி இருந்திருக்காது. கரிகாலன் கல்லணை கட்டியிருக்க முடியாது. ராஜராஜன் பெரும் சாம்ராஜ்யம் அமைத்திருக்க முடியாது.ராஜேந்திரன் கடல்கடந்து வென்றிருக்க முடியாது. இயல்,இசை,நாடகம் இல்லை. எனவே தான், சோழர் கொடியில் புலி வீற்றிருந்தது.
 
எனவே தான் மாடு கட்டி போரடித்தால் மாளாது என யானை கட்டி போரடித்த தஞ்சை நெற்களஞ்சியத்தின் தொல்குடி மக்கள் தமது கடவுளாக புலிகளை வணங்கினர். கோவில்களில் முதல் சிற்பம் புலி. திருவிழாக்களில் முதல் ஆட்டம் புலியாட்டம். காட்டுக்கே போகாமல், புலியையே காணாமல் புலியின் அருமையை அறிந்திருந்தனர்.
 
புலிகள் இல்லாவிடின் காவிரி, தென்பெண்ணை, வைகை நமக்கு இல்லை. இவைகள் இல்லாமல் தமிழகம் வெறும் பாலைவனம். ஓடங்களில் சென்றிருக்க முடியாது. ஒட்டகங்களில் தான் பயணித்திருக்கணும்.
 
நண்பர்களே! மனித வாழ்வின் ஆதாரம் நீர். அந்த உயிர்நீரை அளிப்பது காடுகள். அந்தக் காடுகள் நமக்குக் கோவில் எனில் அதில் வாழும் கடவுள் புலிகள். காடுகளுக்குச் செல்லும் போது ஜாலியாக பியர்பாட்டிலை உடைத்து வீசும் போது, அவை நமக்களித்த உணவை, மொழியை, பண்பாட்டை இழிவு செய்கிறோம் என்பதை உணருங்கள்.
 
து.வெங்கடேஷ்
மாவட்ட வன அலுவலர்
கோயம்புத்தூர்
Editor's Choice

விதைகளுக்குள் ஒரு விருட்சம் ஒளிந்திருக்கிறது என்று கூறுவதுண்டு. உண்மைதான் அதோடு விதைகளுக்குள் மருத்துவம் ஒளிந்திருக்கிறது என்றும் கூறலாம்.
சத்துக்களின் சேமிப்புக்கிடங்கு என்று விதைகளைச் சொல்வார்கள். நாம் இங்கே சில விதைகளைப்பற்றியும் அதன் மருத்துவ குணங்கள் பற்றியும் காண்போம்.

எள்

எள் எள்ளின் விதை மிகவும் சக்தி நிறைந்தது. எள்ளில் இரும்புச் சக்தி அதிகம் உண்டு. பருவம் எய்தி பெண்களுக்கு எள் உருண்டையைச் செய்து தரும் வழக்கம் இந்தியாவில் கிராமப்புறங்களில் உண்டு. எள்ளில் கால்சியம் சத்தும் உள்ளது. புரதச் சத்தும், வைட்டமின் பி 6 ம் எள்ளில் உண்டு. நல்லெண்ணெய் பண்டைக்காலம் தொட்டே தமிழர்களின் பயன்பாட்டில் இருந்து வருவதை அறிவோம்.

எள்ளில் பலகாரங்கள் செய்து சாப்பிடலாம். தற்போது வெளிநாட்டின் அறிவியல் ஆய்வுகள் எள்ளில் புற்றுநோயைத் தடுக்கும் தன்மை அதிகம் உள்ளதாக கண்டறிந்திருக்கிறார்கள். மேலும் கல்லீரல் நோய்களை குணப்படுத்துகிறது. எள்ளில் டிடாக்ஸிகே1ன் எனப்படும் நச்சுத் தன்மையை அகற்றும் தன்மை உண்டு. கேன்சர் நோயாளிகள் இதை அவசியம் உணவில் எடுத்துக் கொள்ள வேண்டும்.

திராட்சை விதைகள்

கறுப்புத் திராட்சை விதைகளுக்கும் அதன் தோலுக்கும் புற்றுநோயை விரட்டும்குணம் உண்டு. புற்றுநோயை வளர்க்கும் செல்களைத் தடுக்கும் குணம் உண்டு. கறுப்புத் திராட்சையை உப்புகலந்த நீரில் ஊற வைத்து, அதன் மேல் தெளிக்கப்பட்டிருக்கும் கெமிக்கலை முதலில் சுத்தப்படுத்திக்கொண்டு, அப்படியே மிக்ஸியில் போட்டு அரைத்து ஜூஸ்போல் குடித்து வரலாம். வயிறு தொடர்பான நோய்களுக்கும் திராட்சை சாறு அரும் மருந்தாகும்.

முருங்கை

முருங்கை விதைக்கு நீர்த்துப் போன விந்தனுவைக் கட்டும் தன்மை உண்டு. உடலுக்கு பலம் தரக்கூடியத. முருங்கை விதையை பசுநெய்யில் பொரித்து, பொடி செய்து செய்து பாலில் கலந்து குடித்துவர நல்ல பலன் கிட்டும். 5 கிராம் அளவிற்கு பொடியைக் கலந்து குடிக்கலாம். சிலருக்கு வயிற்றோட்டம் ஏற்படவும் வாய்ப்புகள் உள்ளது.

மாதுளை

மாதுளை விதைகளைக் காயவைத்து, கருஞ்சீரகம் சேர்தது பொடி செய்து, நெய் சேர்த்து உண்டு வர கருப்பைப் புண்கள் ஆறும். மாதுளம் பழத்திற்கு இதயத்திற்கு பலம் தரும் தன்மை உண்டு. அதன் தோல்களுக்கும் ஆற்றல் உண்டு. அதையும் காய வைத்துப் பொடி செய்து சாப்பிட்டு வரலாம். வயிறு தொடர்பான நோய்களுக்கு நல்லது.

கழற்சிக்காய் விதை

கழற்சிக்காய் விதைக்கு உடலில் உள்ளே மற்றும் வெளியே இருக்கும் கட்டிகளைக் கரைக்கும் தன்மை உண்டு. இதன் விதை கெட்டித்தன்மையாய் இருக்கும். மேலோட்டினை உடைத்து வெள்ளைநிறத்தில் இருக்கும் விதையை எடுத்து உடைத்து பௌடராக்கி வைத்துக்கொள்ளலாம். ஐந்து கிராம் அளவு தேனில் கலந்து அல்லது பாலில் கலந்து சாப்பிடலாம். இனிப்பு நீரைக் கட்டுப்படும். கர்ப்பபை நீர் கட்டிகளை நீக்கி குணப்படுத்தும்.

துளசி விதை

துளசி விதையை 2 கிராம் அளவு எடுத்து குளிர்ந்த நீர் விட்டு அரைத்துக் கொடுக்க குழந்தை பிறந்தபின் அடிவயிற்றில் உண்டாகும் குத்தல் நீங்கும். குத்திருமல் தணியும். துளசி விதையை குளிர்ந்த நீரில் ஊறவைத்து, அந்நீரைப்பருக, வெள்ளைப்படுதல் நீங்கும்.

நாயுருவி விதை

நாயுருவி விதையைப் பொடீத்த நன்கு சலித்து கால் ஸ்பூன் அளவு பாலில் கலந்து குடித்து வர நரம்புகள் பலப்படும், அதிகப் பசியைக் கட்டுப்படுத்தும். உடல் எடையைக் குறைக்கும், இனிப்பு நீரைக் கட்டுப்படுத்தும்.

திருநீற்றுப் பச்சிலை விதை

குளிர்பானங்களில் இவ்விதைகளை ஊற வைத்திருப்பர். இதனை சாப்ஜா என்று கடைகளில் சொல்வார்கள். இவ்விதையை பாலில் ஊற வைத்து, பனங்கற்கண்டு சேர்த்துப் பருகிவர வெய்யிலினால் உண்டான அசதி நீங்கும். உடல் சூட்டினால் ஏற்படும் வயிற்று வலி தீரும், குடல் புண்கள் ஆறும். கண் புகைச்சல் கட்டுப்படும்.

பருத்தி விதை

இவ்விதைகளை ஊற வைத்து அரைத்துப் பால் எடுத்து பனைவெல்லம் சேர்த்துப் பருகுவார்கள். தமிழகத்தில் காலை வேலைகளில் கடைகளில் சூடான பருத்திப் பால் கிடைக்கும். குடிப்பதற்கு சுவையாகவும் இருக்கும். மலச்சிக்கல் குணமாகும், உடலுக்கு புஷ்டியைத் தரும். இருமல் மறையும்.

பூசணி விதை

வெண்பூசணி விதை உடலுக்கு குளிர்ச்சியைத் தரும் அதிகப்படியான பித்தத்தை தணிக்கும் . பூசணி விதையை அரைத்து, பால் மற்றும் பனங்கற்கண்டு சேர்த்துக் குடித்து வர உடல் எடை கூடும்.

பரங்கி விதை

பரங்கி விதையை காயவைத்துப் பொடித்து 2 டீஸ்பூன் அளவு 2 கிளாஸ் நீர்விட்டு கொதிக்க வைத்து அரை கிளாஸாக சுண்டியவுடன் வடிகட்டிக் குடிக்க வெள்ளைப் போக்கு குணமாகும். சிறுநீரைப் பெருக்கும்.

பப்பாளி விதை

பப்பாளிவிதைகளை 1 டீஸ்பூன் அளவு எடுத்து காயவைத்து இடித்து நீர் விட்டு கஷாயம்போல் காய்ச்சி, வாரம் ஒருமுறை கொடுக்க, குழந்தைகளுக்கு வயிற்றில் உண்டாகும் கீரிப்புழுக்கள் வெளியேறும். ஆசன வாய் அரிப்பு சரியாகும்.

Editor's Choice

மரங்களில் இருந்து வெளியாகும் சஞ்சீவிக் காற்றுக்கு நுண்கிருமிகளைக் கொல்லக்கூடிய ஆற்றல் உண்டு என்பார்கள். இதன் காரணமாக தான் பலரும் வேப்ப மரத்தின் அடியில் ஓய்வுகொள்ள விரும்புகின்றர். மேலும், இம்மரத்தடியில் அமரும் போது மனமும் அமைதி பெறுகிறது.

வேப்பமரத்தின் குச்சி, பட்டை, இலை, பூ, பழம், கொட்டை என அனைத்திலும் அதிகபடியான மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளன. இதன் காரணமாக தான் ஆயுர்வேதத்திலும், சித்த மருத்துவத்திலும் தவிர்க்க முடியாத மருந்தாக வேம்பு இருந்து வருகிறது.

வேம்பினை நாம் பல்வேறு முறைகளில் பயன்படுத்துவதன் மூலம் அதிக பயன்கள் (medicinal benefits of neem) பெறலாம். வேப்பிலை சாறு, விழுது, கஷாயம், பொடி என நோயின் தன்மைக்கு ஏற்றவாரு நாம் பயன் படுத்தலாம். வேம்புக்கொண்டு நாட்டு மருந்துகளை வீட்டிலேயே தயாரிக்கும் முறைகள் குறித்து இங்கு காணலாம்

வேம்பின் மருத்துவ பயன்கள் (Medicinal benefits on Neem)

  • காலில் பித்த வெடிப்பு உள்ளவர்கள் வேப்பிலையுடன் மஞ்சளைச் சேர்த்து மைபோல் அரைத்து, அதைனை வெடிப்பின் மேல் நன்றாகத் தடவி மறுநாள் காலையில் தேய்த்துக் கழுவிவிட வேண்டும். இப்படியாக செய்து வந்தால் பித்த வெடிப்புகள் (Neem Cures Cracked heels) மறையும்.

  • நகச்சுத்தி ஏற்பட்டால் எலுமிச்சம் பழத்தில் துளையிட்டு அதை விரலில் சொருகிக் கொண்டால் குணமாகிவிடும். இருப்பினும், இந்த நோய் வந்ததும் வேப்பிலையை மைபோல் அரைத்து அதனுடன் மஞ்சள் சேர்த்து, அதை நோய் கண்ட இடத்தில் வைத்துக் கட்டி வந்தால் விரைவில் குணமாகும்.

  • வேப்பிலையுடன் வேலிப்பருத்தி இலை, மஞ்சள் சேர்த்து மைபோல அரைத்து கட்டியைச் சுற்றிலும் பற்றுப்போட்டு வந்தால் கட்டி உடைந்துவிடும். வெந்நீர், வடிகஞ்சி, நெருப்புச்சுட்ட (Neem Heals Wounds) புண்ணுக்கும் இத்தகைய பற்று போடலாம்.

  • குழந்தைகளுக்கு வேப்பங்கொழுந்து உறை மருந்து கொடுத்து வந்தால் பிற்காலத்தில் எந்த வியாதியும் வராமல் தற்காத்துக்கொள்ள முடியும், ஆனால் குழந்தைகளுக்கு பயன்படுத்துவதற்கு முன் மருத்துவரிடம் ஆலோசனை பெறுவது நல்லது.

  • வேப்பம் பழத்தில் செய்யும் சர்பத்தை சாப்பிட்டால் பித்தம் தணியும், ரத்தம் சுத்தமடையும். தோல் சம்பந்தப்பட்ட நோயுள்ளவர்கள் தொடர்ந்து சாப்பிட்டுவந்தால், சொறி, சிரங்குகளை உற்பத்திச் செய்யும் நுண்கிருமிகள் அழியும்.

  • வேப்பிலையை தண்ணீரில் கொதிக்க வைத்து, பின் ஆறிய தண்ணீரை கொண்டு முகம் மற்றும் கை, கால்கள் கழுவி வந்தால் சரும (Neem Cures skin Allergies) பிரச்சனைகள் அனைத்தும் குணமாகும்.

  • வேப்பம் விதையுடன் வெல்லம் சேர்த்து காலை மற்றும் மாலை என ஒரு மண்டலம் சாப்பிட்டு வந்தால் உள் மூலம், வெளி மூலம் தீரும்.

  • மாதம் ஒரு முறை வேப்பிலையை சாப்பிட்டால் வயிற்றில் உள்ள பூச்சிகள் (Neem kills Germs in stomach) வெளியேறும். வாந்தி, மயக்கம் போன்றவை குணமாகும்.

  • வேப்பம் பூவை நிழலில் உலர்த்தி சம்பிராணியுடன் சேர்த்து தூபம் போட்டால் காற்றில் உள்ள கிருமிகளை அழித்து விடும். அதே போன்று இலைகளை உலர்த்தி தூபம் போட்டால் கொசு போன்றவை வீட்டிற்குள் வராது.

  • வேம்பு நோய் எதிர்ப்பு மண்டலத்தை (Neems gives Immunity) வலுப்படுத்த உதவுகிறது. வேம்பில் இருந்து பெறப்படும் வேப்ப எண்ணெயில் லிம்போசைட்கள் மற்றும் மோனோசைட்டுகளின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. வேப்ப எண்ணெயில் அடிக்கடி உணவில் சேர்த்து வர உடலில் நோய் எதிர்ப்பு சத்தி அதிகரிக்கும் மேலும், மாதம் ஒருமுறை வேப்பம் பூ ரசம், துவையல் போன்றவை செய்து சாப்பிடலாம்

  • அனைத்து சரும பராமரிப்பிலும் வேம்பு முக்கிய பங்கு வகிக்கிறது. வேம்பு மற்றும் மஞ்சள் அரைத்து பூசி சிறிது நேரம் கழித்து முகம் கழிவினால் முகம் பொலிவு பெறும். முகத்தில் தோன்றும் பருக்கள் போன்றவற்றிற்கு எதிராக நன்கு செயல் படும். இதே போல் வேப்ப எண்ணெய் உங்கள் தலைமுடியை பாதுகாக்க பல வழிகளில் உதவுகிறது.

  • வேப்ப மரக் குச்சிகளைக் கொண்டு பல் துலக்கினால் அது பற்களின் ஈறுகளை வலுப்படுத்தும் என்று ஆய்வுகள் கூறுகின்றன. அதேபோல காலையில் எழுந்ததும் பிரஷ் செய்யும் முன் வேப்ப எண்ணெய்யை கொண்டு வாய் கழுவிவிட்டு பிரஷ் செய்தால் பல் உறுதிபடும்.

  • வேப்ப எண்ணெயுடன் தூய தேங்காய் எண்ணெய் அல்லது ஆலிவ் எண்ணெயை 1:4 என்ற விகிதத்தில் கலந்து உடலில் தேய்த்து கொண்டு உறங்கினால் கொசுக்கடி மற்றும் பூச்சி கடிகளிலிருந்து இருந்து தப்பிக்கலாம்.

Editor's Choice

வாழை இலைப் படுக்கையும், வாழைத்தண்டுச் சாறும், வாழைக்கிழங்கின் சாறும் மிகச்சிறந்த நச்சு முறிப்பான்கள். அதனால்தான் இன்றைக்கும் கிராமங்களில் பாம்பு கடித்து விட்டால் முதலில் வாழைச்சாறு பருகி நச்சை முறிக்கிறார்கள்.

தொற்று பரவாமல் இருப்பதற்காக, திருமணப் பந்தல் உட்பட மக்கள் கூடும் எந்த திருவிழாக்களிலும், எல்லா இடங்களில் வாழை மரத்தைக் கட்டி வைக்கின்றனர்.

சரும பராமரிப்பு

வாழை இலையில் தொடர்ந்து உணவு உட்கொண்டு வந்தால் தோல் பளபளப்பாகும். மந்தம், வலிமைக்குறைவு, இளைப்பு போன்ற பாதிப்புகள் நீங்கும். அழல் எனப்படும் பித்தமும் தணியும்.

ரத்தம் சுத்தம் (Clean the blood)

வாழை இலையில் உண்பதால், ரத்தத்தில் உள்ள கழிவுகளை அகற்றப்பட்டு, ரத்தம் சுத்திகரிக்கப்படுகிறது.

ஜீரணத்தைத் தூண்டுகிறது (Digestion)

வாழை இலை ஒரு கிருமி நாசினியாகும். உணவில் உள்ள நச்சுக்கிருமிகளை வாழை இலையில் உள்ள ஆன்டி-பாக்டீரியாக்கள் அழிக்கும் தன்மை கொண்டவை. அதனால் நச்சுக்களை அகற்றி, ஜீரணத்தைத் தூண்டிவிடுகின்றன.

அல்சருக்கு மருந்து (Remedy for Ulcer)

வாழை இலையின் மேல் உள்ள பச்சைத் தன்மை, உணவை எளிதில் ஜீரணமடையச் செய்வதுடன் வயிற்றுப் புண்ணை ஆற்றும் தன்மை கொண்டது. நன்கு பசியைத் தூண்டும்.

சிறுநீரகக் கல் (Kidney Stone)

வாழை இலையில் சாப்பிடுவது, சிறுநீரகத்தில் சேரும் கல் உள்ளிட்ட சிறுநீரகம் சார்ந்த நோய்களுக்கு தீர்வாக அமைவதுடன், நோய் எதிர்ப்புச் சக்தியையும் அதிகரிக்கச் செய்யும்.

புற்றுநோயைத் தடுக்கிறது (Prevent Cancer)

நாம் சாப்பிடும் சில்வர் தட்டை சோப்பு போட்டு கழுவுகிறோம். அதில் தங்கிவிடும் சிறிய அளவிலான ரசாயனம், உடலில் சென்று புற்றுநோய் மற்றும் வயிறு தொடர்பான நோய்களுக்கு அடித்தளம் அமைக்கிறது. இத்தகைய பாதிப்புகளில் இருந்து நம்மை வாழை இலைக் காக்கிறது.

பார்க்கின்சன் நோய்க்கு மருந்து

வாழை இலையில் உள்ள பாலிபினால் (Polyphenol) எனப்படும் ஆக்ஸிடன்ட்கள் பார்க்கிசன் நோய்க்கு (Parkinson’s disease) மருந்தாகப் பயன்படுகின்றன.

இளநரைக்கு குட்பை

வாழை இலையில் சாப்பிடுவதால், இளநரை வராமல் தடுத்து, தலைமுடியை நீண்டநாட்கள் கருப்பாக வைத்துக்கொள்ள முடியும்.

கூடுதல் சுவை

வாழை இலையின் மேற்புறத்தில் உள்ள (wax coating) என்ற மெழுகு பூச்சு, அதில் பரிமாறப்படும் உணவுக்கு கூடுதல் சுவையைக் கொடுக்கிறது.

இவை அனைத்திற்கும் மேலாக, வாழை இலை சுற்றுச்சூழலுக்கு உகந்தது. ரசாயனக் கலப்பு இல்லாதது. இதில் இடம்பெற்றுள்ள கிரீன் டீக்கு (Green Tea)நிகரான பாலிபினால்கள் (Polyphenols) உடலில் நச்சுத்தன்மை உருவாவதைத் தடுத்து, நோய்கள் வருவதற்கான வாய்ப்புகளைக் குறைக்கிறது.

எனவே நீண்ட ஆயுளோடு வாழ இனி, வாரத்தில் 3 நாட்களாவது வாழை இலையில் சாப்பிட்டு, ஆரோக்கியத்தை நம்வசப்படுத்துவோம்.

Editor's Choice

ஒரு செயலைத் திரும்பத் திரும்ப செய்து வரும்போது அது உங்களுக்குப் பழக்கமாகிவிடும். இப்பழக்கம் தொடரும்போது அது உங்களுக்கு இயல்பாகிவிடும்.

வாழ்க்கையில் வெற்றிபெற்றவர்கள் தினசரி கடைபிடிக்கும் ஐந்து பழக்கங்கள் என்னவென்பதை பார்ப்போம்..

1. காலையில் ஆறு மணிக்கு முன்னே எழுந்து விடுங்கள். ஏனெனில் காலையில் எழும் போது உங்களின் சுற்றுச் சூழல் மிக அருமையானதாக இருக்கும். காற்றும் தூய்மையானதாக இருக்கும்.

2 இரண்டாவதாக மேற்கொள்ள வேண்டிய பழக்கம் என்னவென்றால் ஏதேனும் ஒரு உடற்பயிற்சியை மேற்கொள்ளுங்கள. உங்ளுக்கு என்ன வயது என்பதைப் பற்றியெல்லாம் கவலைப்படத் தேவையில்லை. முதியவர்களாக இருந்தாலும் குறைந்த பட்சம் நடைபயிற்சி செய்து வரலாம்.

3. தியானத்தைக் கற்றுக¢கொள்ளுங்கள் சில நிமிடங்களாவது தியானம் செய்யுங்கள். உடல் பயிற்சி உடலுக்கு புத்துணர்ச்சி அளிப்பது போல் மனதுக்கு புத்துணர்ச்சி அளிப்பதாக தியானம் அமைகிறது.

4. ஏதேனும் ஒரு புத்தகம் படிக்கும் பழக்கத்தை மேற்கொள்ளுங்கள். அது உங்கள் தொழில் தொடர் புடையதாக இருக்கலாம், அல்லது தனிப்பட்ட முறையில் பிடித்த சப்பெஜ்க்டாக இருக்கலாம். தினசரி ஒரு பதினைந்து பக்கங்களாவது வாசிக்கும் பழக்கத்தைக் கைக்கொள்ளுங்கள். இப்படி வாசிக்கும்போது நீங்கள் ஒரு மாதத்தில் இரண்டு புத்தகத்தை முழுமையாய் வாசித்து விடுவீர்கள். வருடத்திற்கு 24 புத்தகங்கள். இப்படியாக நீங்கள் நிறைய விசயங்களைத் தெரிந்து கொண்டிருப்பீர்கள்.

5. ஐந்தாவதாக தினசரி படுக்கையில் உறங்கச் செல்லும்முன் அன்றைய நாளில் உங்களுடைய செயல்பாட்டினைப் பற்றிய கண்ணோட்டம் விடுங்கள். யோசித்துப் பாருங்கள். இதனால் உங்களைப் பற்றிய ஒரு சுய மதிப்பீட்டினை செய்து கொள்வீர்கள். எது சரி எது தவறு என்பதை யோசிக்கும் போது அறிந்து கொள்வீர்கள். அன்றாடம் இப்படி சுயமதிப்பீட்டினை செய்து வரும்போது ஒரு வருடத்தில் உங்கள் குணமே மாறிவிடும். எது சரி எது தவறு என்பது இயல்பாகவே உங்களுக்கு தெரிந்து விடும்.

Editor's Choice

சமச்சீர் உணவே ஆரோக்கிய வாழ்வுக்கு அடித்தளம். எனவே தான் எல்லா காலங்களிலும் ஆரோக்கியமான உணவு முறைகளை பின்பற்றுவது அவசியமாகிறது.

புரதம், மாவுப் பொருள், கொழுப்பு, வைட்டமின், தாதுஉப்பு முதலிய அனைத்தும் சீரான அளவில் இருக்க வேண்டும். அதைத்தான் சமச்சீர் உணவு என்று சொல்லுகிறோம். சமச்சீர் உணவுத் திட்டத்தின்படி தேவையான வைட்டமின் சத்துக்களையும் தாதுஉப்புக்களையும் பெற ஒருவர் தினசரி 125 கிராம் கீரைகளையும் 75 கிராம் காய்களையும் அரிசி, பருப்பு போன்ற மற்ற உணவோடும் சேர்த்துச் சாப்பிட வேண்டும்.

வைட்டமின்கள் நிறைந்த கீரைகள் 

அரிசி, பருப்பு போன்ற உணவுகளில் நமக்குத் தேவையான மாவுப் பொருட்களும், புரதமும் மட்டுமே கிடைக்கின்றன. முக்கியமான வைட்டமின் சத்துக்களையும் தாதுஉப்புக்களையும் (Minarals) நாம் கீரையிலிருந்துதான் எளிதாகப் பெற முடியும்.

இன்றைய காலகட்டத்தில் வைட்டமின் குறைபாடு அதிகம் காணப்படுகிறது. குழந்தைகளிடமும் கர்ப்பிணிகளிடமும் இவை அதிகமாகக் காணப்படுகின்றன. நமது உணவில் தினந்தோறும் கீரையைச் சேர்த்துக் கொள்வதைப் பழக்கமாக்கிக் கொள்ளவதன் மூலம் இது போன்ற குறைபாடுகளை பெருமளவில் குறைக்க முடியும் என்கின்றனர் மருத்துவர்கள்.

வைட்டமின் A-க்கு ஏற்ற கீரை வகைகள் (Vitamin A)

வைட்டமின் A நமது கண்களை ஆரோக்கியமாக வைத்திருப்பதற்குத் தேவைப்படுகின்றது.

அகத்தி, முளைக்கீரை, தண்டுக்கீரை, முருங்ககைக்கீரை, பாலக் அல்லது பீட்ரூட்கீரை, கொத்தமல்லி, கறிவேப்பிலை முதலிய கீரைகளில் வைட்டமின் A அதிகமாகவுள்ளது.

வைட்டமின் B-க்கு ஏற்ற கீரை வகைகள் (Vitamin B)

வைட்டமின் B (Vitamin B)குறைந்தால் பசி ஏற்படாது. நரம்புகள் சக்தியிழந்து உடல் வலிவு குறைந்து காணப்படும். வாயிலும் உதட்டிலும் புண்கள் ஏற்படும். இரத்த சோகை உண்டாகும். பெரிபெரி என்ற நோயும் உண்டாகும்.

கறிவேப்பிலை, புளிச்சக்கீரை, பொன்னாங்கண்ணிக்கீரை உள்ளிட்டவற்றை சாப்பிடுவதால் இது போன்ற நோய்களில் இருந்து நம்மை பாதுகாத்துக்கொள்ள முடியும்

வைட்டமின் C-க்கு ஏற்ற கீரை வகைகள் (Vitamin C)

வைட்டமின் C (Vitamin C)சத்து பல், எலும்பு முதலிய உறுப்புகள் வலிவுடன் வளர்ச்சியடைய உதவுகின்றது. வைட்டமின் சத்து நோய்களை எதிர்க்கம் சக்தியைக் கொடுக்கின்றது. வைட்டமின் C சத்துக் குறைவினால் ஸ்கர்வி என்ற நோய் ஏற்படுகின்றது.

 வைட்டமின் C அகத்திக் கீரை, முருங்கைக் கீரை, முளைக்கீரை, முட்டைகோஸ், கொத்தமல்லி முதலிய கீரைகளில் அதிகமாக இருக்கிறது. வைட்டமின C சத்து கீரைகளை வேக வைக்கும்போது பெரிதும் அழிந்து விடுகிறது. சமைக்கும்போது அதிக நேரம் வேக வைக்காமலும் வேகவைத்த நீரை இறைத்து விடாமலும் இருக்க வேண்டும். சுமைக்காமல் சாப்பிடக்கூடிய பல கீரைகளையும் பச்சையாகச் சாப்பிடக் கற்றுக் கொள்ள வேண்டும்.

சுண்ணாம்பு சத்து (Calcium) அதிகம் இருக்கும் கீரைகள்

நமது இருதயம் சரியாகச் சுருங்கி விரிவதற்கும் சுண்ணாம்புச் சத்து அவசியம். சுண்ணாம்புச் சத்து வளரும் குழந்தைகளுக்கும் பாலூட்டும் தாய்மார்களுக்கும் கர்ப்பிணிகளுக்கும் மிக மிக அதிகமாகத் தேவைப்படுகின்றது.

சுண்ணாம்புச் சத்து அகத்தி, முருங்கை, தண்டுக்கீரை, அரைக்கீரை, வேளைக்கீரை, கறிவேப்பிலை, பொன்னாங்கண்ணி, நச்சுக் கொட்டைக் கீரை, மணத்தக்காளிக் கீரை, கரிசலாங்கண்ணி கீரை, பாலக்கீரை முதலியவற்றில் கிடைக்கின்றது.

இரும்புச் சத்து (Iron) குறைபாட்டிற்கு உதவும் கீரை வகைகள்

இரும்புச் சத்து நம் உடல் வளர்ச்சிக்கு இன்றியமையாதது. இரும்புச் சத்துக் குறைவினால் இரத்தசோகை உண்டாகிறது. கர்ப்பிணிகளுக்கு இரும்புச் சத்து நிறைய தேவைப்படும்.

இரும்புச்சத்து முளைக்கீரை, அரைக்கீரை, கொத்தமல்லி, மணத்தக்காளிக்கீரை, குப்பைக் கீரை, நச்சுக் கொட்டைக்கீரை, பசலைக்கீரை, வல்லாரைக் கீரை, புண்ணாக்குக் கீரை, வேளைக்கீரை முதலிய கீரைகளில் நிறைய கிடைக்கிறது.

மேற்கூறிய கீரைகளைவிட எல்லா வைட்டமின் (Vitamin) சத்துக்களும் தாதுஉப்புக்களும் (Minarals) ஒருங்கே கொண்ட கீரை தவசிக்கீரையாம். இக்கீரையைச் சமைக்காமல் பச்சையாகவும் சாப்பிடலாம்.

வைட்டமின்கள் மட்டுமின்றி நம் உடல் வளர்ச்சிக்குத் தேவையான பாஸ்பரஸ், மக்னீசியம், சோடியம், பொட்டாசியம் போன்ற தனிமங்களும் கீரை வகைகளில் போதிய அளவில் கிடைக்கின்றன. ஆகவே எளிதில் மலிவாகக் கிடைக்ககூடிய கீரைகளை நாள்தோறும் நமது உணவில் சேர்த்து ஆரோக்கிய வாழ்வு பெறுவோம்.

பக்கம் 11 / 15